Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோனியாவுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

சோனியாவுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
, திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (17:24 IST)
புதுடெல்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து, இந்த சந்திப்பின் போது, சோனியாவுடன் அவர்கள் விவாதித்ததாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்ற பின் திமுக தலைவர்கள், சோனியா காந்தியைச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

மத்திய அமைச்சரவை குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களுடன் சந்தித்துப் பேசிய முதல் அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமது டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

இந்நிலையில் மு.க. ஸ்டாலின், சோனியாவைச் சந்தித்துப் பேசியிருப்பதன் மூலம் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை அடுத்த ஆண்டிலேயே (2010) நடத்தலாம் என்று ஸ்டாலின் பரிந்துரை செய்திருக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டமன்றக் கட்டிடம் புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ள நிலையிலும், கருணாநிதியின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டும், ஒரு ஆண்டு முன்கூட்டியே தமிழக சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின், சோனியாவிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.

மேலும் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, திமுக - காங்கிரஸ் கூட்டணி சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறின.

Share this Story:

Follow Webdunia tamil