Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்க- நாம் தமிழர் கட்சி

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்க- நாம் தமிழர் கட்சி
, செவ்வாய், 24 ஏப்ரல் 2012 (12:06 IST)
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் 13 பேர், தங்களை விடுதலை செய்யக்கோரி மீண்டும் ஒரு முறை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்களில் பலரின் உடல் நிலை மிகவும் நலிவுற்றுள்ளது என்கிற செய்தி வரு்த்தத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.

போரின்போது இலங்கைக்கு மண்ணெண்ணை கடத்தினார்கள், மருந்து கடத்தினார்கள், காயம்பட்டவர்களைக் காப்பாற்ற குருதி கடத்தினார்கள் என்பது போன்ற குற்றச்சாற்றுகளின் அடிப்படையிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஐயத்திலுமே இவர்கள் பல ஆண்டுகளாக செங்கல்பட்டிலுள்ள சிறையில், சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு எதிராக தமிழக காவல் துறையினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இதில் சிலர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள். ஆனால், அதற்குப் பிறகும் ஐயத்தின் பேரில் அவர்களை தடுத்து வைத்துள்ளது தமிழக காவல் துறை. இது எப்படி நியாயமாகும், சட்டப்பூர்வமான செயலாகும்?

இதுதவிர, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்று பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரணங்களைப் பெறக்கூட தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு அனுமதிக்க மறுக்கிறது. தங்களை விடுவிக்கக்கோரி ஒவ்வொரு முறையும் இவர்கள் பட்டிணிப் போராட்டம் நடத்தும்போது அவர்களோடு மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, விடுதலை செய்வது தொடர்பாக அரசுடன் பேசி முடிவெடுக்கிறோம் என்றுதான் உறுதியளிக்கிறது.

அவர்களின் உறுதிமொழியை ஏற்று இவர்கள் பட்டிணிப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். ஆனால், அதன் பிறகு அவர்களைக் கண்டுகொள்வதில்லை. அரசு நிர்வாகத்தின் இப்படிப்பட்ட பொறுப்பற்ற போக்குதான் இப்போது நடைபெற்றுவரும் பட்டிணிப் போராட்டத்திற்குக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், ஈழத் தமிழர்கள் தொடர்பாக காவல்துறையினரின் பார்வையிலும், அணுகுமுறையிலும் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தாங்கள் வாழ்ந்த நாட்டில் உரிமை மறுக்கப்பட்டு, உயிர் பறிக்கப்படும் நிலையில் இங்கு ஓடி வந்த நம் சொந்தங்களை, நம்மால் தேர்வு செய்யப்பட்ட அரசின் காவல் துறை இப்படி சித்ரவதைக்கு உள்ளாக்குவது வேதனையைத் தருகிறது.

ஈழ மண்ணில் கொடுமை என்று இங்கு ஓடி வந்தால், தாய்த் தமிழ் மண்ணில் அதையும் விட கொடுமையான நிலை. எங்குதான் போவான் ஈழத் தமிழன்? எனவே தமிழக அரசு இந்த மக்களின் நிலையை நியாயமான பார்வையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழக காவல் துறையின் க்யூ பிரிவின் நடவடிக்கை சட்டப்பூர்வமானதுதானா என்பதை ஆராய வேண்டும். தமிழக அரசு நல்ல முடிவை எடுத்து இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil