Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த அரசு அலுவலர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு- ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia
சனி, 24 டிசம்பர் 2011 (13:28 IST)
மிகச் சிறந்த அரசு அலுவலர்கள் வருடந்தோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒளிவு மறைவற்ற, வெளிப்படையான, ஊழலற்ற திறமையான மற்றும் பொறுப்புள்ள நிருவாகத்தை அளிப்பதுதான் ஒரு நல்ல அரசின் இலக்கணம் என்பதை குறிக்கோளாகக் கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு இயந்திரத்தையும், அதன் பணியாளர்களையும் முழுமையாக பயன்படுத்தி, அரசால் வகுக்கப்படும் திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படவும், அதன் பலன்கள் யாவும் மக்களுக்கு உரிய நேரத்தில் திட்டமிட்டவாறு சென்றடையச் செய்திடவும் முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.

அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள், அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்கள் மக்களுக்கான நற்பணி ஆற்றுவதிலும், அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய, அரசு ஊழியர்கள் கையாண்ட உத்திகள், புது முயற்சிகள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக அமையும் தொடக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று, முதலமைச்சரால் ‘நல் ஆளுமை விருது’ என்ற ஒரு விருது வழங்கிட முடிவெடுத்துள்ளார்.


இவ்விருது, பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல், மேம்பாட்டு முயற்சிகள், வரிமேலாண்மை, நிருவாக சீர்த்திருத்தங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்ட முறையை பாராட்டும் வகையில் இருக்கும்.

இதன்படி, மாநிலத்தின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் கண்டறியப்பட்டு, அறிக்கை பெறப்பட்டு, அவை அரசினால் அமைக்கப்படும் வல்லுநர் குழுவினால் ஆராயப்பட்டு, ‘சிறந்த ஆளுகை’, ‘நிருவாகத்தில் புது உத்திகள் புகுத்துதல்’ ஆகியவற்றை மிகச்சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துகின்ற மூன்று அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் திறமைகளை பாராட்டும் வகையில், 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பதக்கம் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படும்.

தமிழக அளவில் முதல் முறையாக அரசு நிருவாகத்தில் ஊழியர்களுக்கிடையே புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட இந்த முன் மாதிரி திட்டத்திற்கு, விருதுகளுக்காக 6 லட்சம் ரூபாயும், இவற்றை தேர்ந்தெடுக்கவும், ஆவணப்படுத்தவும் 8 லட்சம் ரூபாயும், என மொத்தம் ஆண்டொன்றுக்கு 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

இதன் மூலம், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் மற்றவர்களால் பின்பற்றப்பட்டு, அரசு நிருவாகம் இன்னும் செம்மையாக செயல்பட வழிவகுக்கும். இதனால் அரசு அலுவலர்களிடையே புதிய உத்திகளை கையாண்டு, மக்களுக்கு இன்னும் மேன்மையான முறையில் சேவைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் வலுவடைய வாய்ப்புகள் அதிகமாகும். இதனால் தமிழக அரசு நிருவாகப் பணிகள் இந்திய அளவில் சிறந்த இடத்தை அடையும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments