Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமையல் கேஸ் வெடித்து கணவன்-மனைவி உட்பட 3 பேர் பலி

சமையல் கேஸ் வெடித்து கணவன்-மனைவி உட்பட 3 பேர் பலி
, வியாழன், 3 ஏப்ரல் 2014 (12:55 IST)
சென்னை காசிமேடு பகுதியில் சமையல் கேஸ் கசிந்து வெடித்ததில் கணவன்-மனைவி உட்பட 3 பேர் பலியானார்கள். 13 வயது சிறுமி படுகாயம் அடைந்தாள்.
LPG blast
சென்னை காசிமேடு, முத்தமிழ் நகர், சி பிளாக் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 56). இவருக்கு சொந்தமான 2 அடுக்கு மாடி குடியிருப்பில் தரை தளத்தில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் சுப்ரமணி(42) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவர் ஆவார்.
 
இவருடைய மனைவி துரைச்சி(32). இவர்களுக்கு பிரதீப் என்ற மகனும், முத்துச்செல்வி(13) என்ற மகளும் உள்ளனர். பிரதீப், நெல்லையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வருகிறார். முத்துச்செல்வி மட்டும் பெற்றோருடன் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
 
நேற்று அதிகாலை 5.50 மணியளவில் சுப்ரமணி வீட்டில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது சுப்ரமணி வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து கிடந்தது. சுப்ரமணியும், துரைச்சியும் உடல் சிதைந்து கருகிய நிலையில் வீதியில் பிணமாக கிடந்தனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், காசிமேடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அலுவலர்கள் செல்வராஜ், ராமையா ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி சுப்ரமணி மற்றும் துரைச்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
சிறுமி முத்துச்செல்வியை தேடி தீயணைப்பு படையினர் வீட்டுக்குள் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்த போது, கட்டிலுக்கு அடியில் தீக்காயங்களுடன் முத்துச்செல்வி கிடந்தாள். அவளை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இந்த விபத்தில் அருகில் இருந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணன் வீடும் சேதமடைந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்த கிருஷ்ணனையும் தீயணைப்பு படையினர் மீட்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கிருஷ்ணன் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு இறந்தார். சிறுமி முத்துச்செல்வி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறாள்.
 
சம்பவ இடத்துக்கு வந்த காசிமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். சுப்ரமணி, துரைச்சி, முத்துச்செல்வி 3 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கேஸ் பரவி இருந்தது. அதிகாலையில் எழுந்த துரைச்சி, சமையல் செய்வதற்காக சமையலறைக்கு சென்ற போது அங்கு பரவி இருந்த கேஸ் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
 
இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. சுப்ரமணியும், துரைச்சியும் உடல் சிதைந்து கருகிய நிலையில் கட்டிட சுவரை துளைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வீதியில் வந்து பிணமாக விழுந்தனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
 
வீடு முழுவதும் கேஸ் கசிந்து இருப்பது தெரியாமல் துரைச்சி, வீட்டின் மின் விளக்கை போடும் போதோ அல்லது கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் போதே அது வெடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கின்றனர். மேலும் இதுபற்றி காசிமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil