Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொள்ளையடித்து, வாலிபர்களுடன் உல்லாசமாக அனுபவித்த பெண்

கொள்ளையடித்து, வாலிபர்களுடன் உல்லாசமாக அனுபவித்த பெண்
, வெள்ளி, 24 மே 2013 (16:04 IST)
FILE
நூதன முறையில் நகை, பணம் கொள்ளையடித்து, அதன் மூலம் விரும்பிய வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேட்டூர் பொன்னகர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் இந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி பொற்செல்வி. இவர் நர்சாக உள்ளார். கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி வீட்டில் பழனிச்சாமியின் தாய் சின்னதாய்(70) மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் பழனிச்சாமியின் வீட்டை நோட்டமிட்டார். பின்னர் வெளியில் சென்று செல்போனில் மூதாட்டி சின்னதாயை தொடர்பு கொண்டு அவரது மருமகள் பொற்செல்வி போல் குரலை மாற்றி பேசினார். அப்போது வெளியில் சுடிதார் அணிந்து நிற்கும் ஒரு பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதை உண்மை என்று நினைத்த மூதாட்டி சின்னதாய் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது அந்த பெண் திடீரென வீட்டிற்குள் நுழைந்து 18 பவுன் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து மாயமாகி விட்டார். இதன் மதிப்பு ரூ.4.5 லட்சம் ஆகும். பின்னர் வீட்டிற்கு வந்த பழனிசாமி நடந்த விபரங்களை கேட்டார். பின்னர் வீட்டில் இருந்த 18 பவுன் நகை கொள்ளைப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இதுப்பற்றி மேட்டூர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் கைவரிசை காட்டிய பெண்ணை தேடிவந்தார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த மைதிலி(26) என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவருக்கு சில இளைஞர்களும் உதவியாக இருந்தது தெரியவந்தது. மைதிலி மற்றும் 4 இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு வாலிபரையும் தேடிவருகிறார்கள். சேலம் சிறையில் அடைக்கப்பட்ட மைதிலியிடம் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைபேசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் சிறையில் அவர் காவலர்களை மிரட்டியும் வந்திருக்கிறார். எனவே இவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மேட்டூர் காவல்துறையினர் மைதிலியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து மைதிலியை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது சினிமாவை மிஞ்சும் அளவுக்கு மைதிலியை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மைதிலிக்கு முதலில் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர் அவரை பிரிந்து ரவி என்பவரை 2 ஆவது திருமணம் செய்து கொண்டார். ரவி தற்போது ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனியாக இருந்து வந்த மைதிலிக்கு அம்மாப்பேட்டையை சேர்ந்த தனசீலன்(22), ஓமலூர் ஜோடுகுழியை சேர்ந்த ரமேஷ்(26), கொங்குப்பட்டி அசோக்குமார்(22), கொளத்தூர் சின்னகரட்டூர் ஈஸ்வரன்(27). சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரசாந்த் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களுடன் ஒன்றாக காரில் சுற்றி மைதிலி ஊர், ஊராக சென்று வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணத்தை திருடி வந்து இருக்கிறார். இதன் மூலம் பணம் அதிகளவில் வந்தது.

இந்த கும்பலுக்கு தலைவியாகவும் மைதிலி இருந்து வந்தார். இதனால் கொள்ளையடித்த பணத்தை அவர் அள்ளி அள்ளி கொடுத்து தன்னுடன் திரிந்த வாலிபர்களுடனும், விரும்பிய வாலிபர்களுடனும் சல்லாபம் அனுபவித்து ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார். மைதிலியின் பாட்டி வீடு கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் உள்ளது. கொள்ளையடித்த பணத்தில் அங்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் பங்களா கட்டி மைதிலி ஆடம்பரமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்.

மேலும் மைதிலியின் தலைமையிலான கும்பல் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களிலும், கேரளா மற்றும் கர்நாடகாவிலும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை ஏமாற்றி நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மைதிலியை காவல்துறையினர் மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மைதிலியின் இந்த வாக்குமூலத்தை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல் மைதிலியுடன் கைதான மேலும் 4 வாலிபர்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்த்றையினர் முடிவு செய்து உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil