Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூடங்குளம்: கைது செய்யப்பட்டவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி

கூடங்குளம்: கைது செய்யப்பட்டவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி
, சனி, 24 மார்ச் 2012 (12:36 IST)
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய அணு சக்திக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக வந்த ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூட்டப்புளி மக்களையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலை தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதே அதற்கு எதிராக போராடிவரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இதனை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழக அரசு நியமித்த நிபுணர்கள் குழு கூட, மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு போன்று, அணு மின் நிலையத்திற்குச் சென்றுவிட்டு திரும்பி அறிக்கை அளித்ததே தவிர, மக்களைச் சந்தித்து அவர்களின் அச்சத்தைப் போக்கவில்லை. அதுமட்டுமின்றி, அணு மின் நிலையத்தில் விபத்து ஏதாவது ஏற்பட்டால் தங்களை காத்துக்கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்கிற பயிற்சியையும் அப்பகுதி மக்களுக்கு அளிக்கவில்லை. இவை இரண்டையும் செய்யாமல் அணு உலைகளை இயக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததுதான் இன்றைக்கு போராட்டம் தீவிரமடையக் காரணமாகிவிட்டது.

தங்களின் உயிருக்கும், வாழ்விற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிற அடிப்படையில் கூடங்குளம் பகுதி மக்கள் நடத்தும் போராட்டம் ஜனநாயகப்பூர்வமானது. அதனை ஏராளமான காவல் துறையினரை இறக்கி, அச்சுறுத்தும் வகையில் ஒடுக்க முற்படுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் நேரடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஏதுவாக கைது செய்யப்பட்ட போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களையும், கூட்டப்புளி மக்களையும் எவ்வித கால தாமதம் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கை நேற்று நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் நான் வலியுறுத்திப் பேசினேன்.

போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டவர்களின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது என்பது அறியும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. கூடங்குளம் அணு உலையை நாம் காரண, காரியங்களுடன்தான் எதிர்த்து போராடி வருகிறோம்.

ஆனால் இந்திய மத்திய அரசும், இந்நாட்டின் அணு விஞ்ஞானிகளும் நாம் எழுப்பிய வினாக்களுக்கு நேரடியாக பதில் தராமல், மின்சாரத் தேவையை மட்டுமே முன்னிலைப்படுத்தி அணு உலைகளின் அவசியத்தை நியாயப்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும்.

ஜனநாயக வழியில் நாம் மேற்கொண்டுவரும் அந்தப் போராட்டம் இறுதி வெற்றி பெறும் நாள் நிச்சயம் வரும். அப்படிப்பட்ட போராட்டத்திற்காக நமது உடல் நலத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட சகோதரர்கள் உடனடியாக உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil