Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரை கடத்தி விற்பதற்காக கொலை செய்த 5 பேரின் பரபரப்பு வாக்குமூலம்

Ilavarasan
திங்கள், 21 ஏப்ரல் 2014 (10:30 IST)
வேலூரை சேர்ந்த கார் டிரைவர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். காரை கடத்தி விற்பனை செய்வதற்காக கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
 
காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூர் கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கடந்த 16 ஆம் தேதி கை, கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை வழக்கில் கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
 
அதையொட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) விக்ராந்த பாடீல், காஞ்சீபுரம் நகர துணை காவல் கண்காணிப்பாளர் வி.பாலச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா ஆய்வாளர் ஆர்.மாதவன், பெரிய காஞ்சீபுரம் ஆய்வாளர் எஸ்.பிரபாகரன், துணை ஆய்வாளர்கள் அருள்தாஸ், தேவேந்திரன், சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர்.
 
இதற்கிடையில் கொலை செய்யப்பட்டவர் வேலூர் மாவட்டம் சேன்பாக்கம் கிராமம், காமராஜர் தெருவை சேர்ந்த பலராமன் (வயது 48) என்பது தெரியவந்தது. பா.ஜ.க. பிரமுகரான அவர் வாடகை கார் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
 
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பலராமனுடைய செல்போனை காவல்துறையினர் கைப்பற்றி அவருக்கு எந்த எந்த எண்ணில் இருந்து போன் வந்துள்ளது என்பது குறித்து சைபர் கிரைம் பிரிவு மூலம் கண்காணித்தனர். அப்போது, கடைசியாக முகமதுகவுஸ் என்பவர் பலராமனுக்கு செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முகமதுகவுஸ் யார்? எங்கு இருக்கிறார் என்று காவல்துறையினர் தேடினர்.
 
விசாரணையில் செல்போனில் பேசிய முகமதுகவுஸ் (வயது 30) வேலூர் மாவட்டம் காட்பாடி அழகாபுரி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர், முகமதுகவுஸை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் 4 பேர் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் காட்பாடி பி.சி.கே. நகரை சேர்ந்த ரவி என்கிற வருண் (30), திருவண்ணாமலை மாவட்டம் போரூரை அடுத்த சந்தவாசல் கொள்ளுமேட்டை சேர்ந்த தஞ்சியப்பன் (23), அவரது தம்பி நடராஜ் (22), வேலூர் மாவட்டம் காகிதபட்டரை சாரதி நகரை சேர்ந்த டெய்சி விக்டோரியா ராணி (40) ஆகியோரை கைது செய்தனர். டெய்சி விக்டோரியா ராணியின் சொந்த ஊர் கேரள மாநிலம்.
 
முக்கிய குற்றவாளியான முகமதுகவுஸ் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, என்னுடைய டிராவல்சில் கார் ஓட்டி வந்த பலராமன் தற்போது வேறு ஒருவருடைய காரை ஓட்டி வந்தார். அந்த காரை கடத்தி விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று நினைத்தேன். இதற்காக என்னுடைய நண்பர்கள் மூலம் திட்டம் தீட்டினேன். கடந்த 16 ஆம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு சவாரி செல்ல வேண்டும் என்று என்னுடைய நண்பர்கள் தஞ்சியப்பன், அவரது தம்பி நடராஜ், டெய்சி விக்டோரியா ராணி ஆகியோர் அழைத்தனர். 
 
அவர்கள் 3 பேரும் பலராமனின் காரில் சென்றனர். நானும் ரவியும் மற்றொரு காரில் அந்த காரை பின்தொடர்ந்து சென்றோம். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மணிமங்கலம் அருகே செல்லும் போது முன்னால் சென்ற பலராமனின் காரை வழிமறித்து நிறுத்தினோம். கார் நின்றதும் நாங்கள் அனைவருமாக சேர்ந்து பலராமனின் கண்கள், கைகளை கட்டிவிட்டு மிளகாய் பொடி தூவினோம். பின்னர் தூக்கமாத்திரை கொடுத்தோம். பலராமனின் கழுத்தை கைகளால் நெரித்தோம். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். அவர் இறந்ததை உறுதிபடுத்தியதும் அவரது உடலை கார் டிக்கியில் வைத்து எடுத்து சென்றோம்.
 
காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூர் சாலையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் அவரது உடலை வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் புத்தூருக்கு தப்பி சென்று விட்டோம். அங்கு காரின் நம்பர் பலகையை மாற்றி விற்க ஏற்பாடு செய்தோம். அப்போது நாங்கள் காவல்துறையில் மாட்டி கொண்டோம். 2 கார்களையும் காவல்துறையினர் கைப்பற்றி விட்டனர் என்று அவர் வாக்குமூலம் கூறினார்.
 
கைது செய்யப்பட்ட 5 பேரும் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

Show comments