Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ப்பிணி மகளை கொன்ற தாய் மற்றும் மாமன்கள்; கலப்பு திருமணம் செய்ததால் வெறிச்செயல்

கர்ப்பிணி மகளை கொன்ற தாய் மற்றும் மாமன்கள்; கலப்பு திருமணம் செய்ததால் வெறிச்செயல்
, திங்கள், 31 மார்ச் 2014 (12:52 IST)
மதுரை அருகே காதல் கலப்பு திருமணம் செய்து கர்ப்பிணியான மகளை கொன்ற கொடூரமான தாய் மற்றும் மாமன்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மதுரை திருப்பாலை அம்மன் டவர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 24). இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தனது மனைவி வைதேகி (23) என்பவரை அவரது தாயார் வெங்கடேஸ்வரி கடத்திச் சென்று விட்டார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி அதில் குறிப்பிட்டு இருந்தார்.
 
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டார். இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் கிடைத்தன.
 
இதையடுத்து வைதேகியின் தாயார் வெங்கடேஸ்வரி, தம்பி விமல்ராஜ், மாமன்கள் பாக்கியராஜ், ஜானகிராம் ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது வைதேகியை அவர்கள் கொலை செய்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 
 
இதுபற்றிய விவரம் வருமாறு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் வைதேகி, சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் பக்கத்துப்பக்கத்து வீடுகளில் குடியிருந்து வந்துள்ளனர். வைதேகியின் தந்தை ராஜகோபால் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் சிறுவயது முதலே வைதேகிக்கும், சுரேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
 
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் கேரளாவுக்குச் சென்று அங்கு குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வைதேகியின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் வைதேகி 5 மாத கர்ப்பிணியானார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் 2 பேரையும் குடும்பத்தில் சேர்த்துக்கொள்வதாக கூறி நம்ப வைத்து நாடகமாடியுள்ளனர். இருவரையும் தேனி வீரபாண்டி கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
 
இதை நம்பிய சுரேஷ்குமார் தனது கர்ப்பிணி மனைவி வைதேகியை அழைத்துக்கொண்டு தேனிக்கு வந்துள்ளார். ஆனால் மகள் வைதேகியை மட்டும் ராமநாதபுரத்துக்கு வெங்கடேஸ்வரி அழைத்துச் சென்றுள்ளார்.
 
வைதேகியை வீட்டுக்கு அழைத்து வந்தபின் அவரை தாயார் வெங்கடேஸ்வரி, தம்பி விமல்ராஜ் மற்றும் மாமன்கள் பாக்கியராஜ், அழகர்சாமி, ஜானகிராமன் உள்ளிட்டோர் சுரேஷ்குமார் வேறு சாதி என்பதால் கருவை கலைத்து விடு. வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
 
இதற்கு மறுத்ததால் வைதேகியை கொலை செய்ய அவர்கள் திட்டம் தீட்டி உள்ளனர். இந்த கொலை திட்டத்தை நிறைவேற்ற கடந்த 17-ந் தேதி வீட்டில் வைதேகியை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.
 
அப்போது வைதேகியின் மாமன்கள் அவர்களது நண்பர்களுடன் வீட்டுக்கு வந்து வைதேகியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சாக்கில் வைத்து மூட்டையாக கட்டி குயவன்குடி சுனாமி குடியிருப்புக்கு பின்புறம் உள்ள வைகை ஆற்றங்கரையில் குழிதோண்டி புதைத்து விட்டுச் சென்று விட்டனர்.
 
இதன்பிறகு ஒன்றுமே தெரியாததுபோல் வைதேகியின் தாயார் வெங்கடேசுவரி, தம்பி விமல்ராஜ் மற்றும் மாமன்கள் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சந்தேகம் ஏற்பட்டு சுரேஷ்குமார் விசாரித்துள்ளார். அப்போது அவரது மனைவி குறித்து சரியான பதில் கிடைக்காததால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தான் வைதேகி கொலை செய்யப்பட்ட விவரம் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து வைதேகியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது தாய் மாமன் பாக்யராஜ், தம்பி விமல்ராஜ் ஆகிய 2 பேரும் அடையாளம் காட்டினர். இதைத்தொடர்ந்து அந்த இடத்தை காவல்துறையினர் தோண்டப்பார்த்தனர்.
 
அப்போது சாக்கில் அழுகிய நிலையில் வைதேகியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கேயே மருத்துவர் பழனிக்குமார் பிரேத பரிசோதனை செய்தார். இதன்பின் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது.
 
இதுதொடர்பாக கேணிக்கரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து வைதேகியின் தாயார் வெங்கடேஸ்வரி, தம்பி விமல்ராஜ், மாமன்கள் பாக்கியராஜ், ஜானகிராம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த பயங்கர கொலை தொடர்பாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil