Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும் - கருணாநிதி

ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும் - கருணாநிதி
, திங்கள், 24 மார்ச் 2014 (12:00 IST)
ஐநா மனித உரிமை ஆணையத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
FILE

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து, ஐநா மனித உரிமை ஆணையத்தில், சுதந்திரமான, நம்பகத் தன்மையுடன் கூடிய, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என்று “டெசோ” அமைப்பின் சார்பிலும், திமுகவின் சார்பிலும் பலமுறை வலியுறுத்தி கேட்டு வருகிறோம். அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ள போதிலும், அது உலகத் தமிழர்களின் விருப்பத்தை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற அளவிற்கு இல்லை என்ற குறைபாடு உள்ளது.

இதற்கிடையே அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் ஜெனீவாவில், மனித உரிமை ஆணையத்தில் 24, 25 ஆம் தேதிகளிலும், அதன் மீதான வாக்கெடுப்பு 26 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சர்வதேச, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்து தமிழர்களின் வேண்டுகோள் ஆகும்.

ஏற்கனவே இரண்டு முறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட போது, அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில் தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இப்போதும், ஐநா மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்திய பொறுப்பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாக சொல்லப்படுகிறது. இன்றைக்கும் இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அச்சத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

சிங்களர்கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து, தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றிலும் அழித்திடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சர்வதேச சுதந்திரமான நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

இந்திய அரசு ஐநா மனித உரிமை ஆணையத்தில் நடைபெறவுள்ள விவாதத்தின் போது, ஈழத் தமிழர்களின் பால் அக்கறையோடு, சர்வதேச சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil