Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்காடு இடைத்தேர்தல்; நாளை காலை வாக்குப்பதிவு

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2013 (10:22 IST)
FILE
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த சில நாட்களாக அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. நாளை காலை அங்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள் (அதிமுக) மரணம் அடைந்ததையொட்டி, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜாவும், திமுக சார்பில் வெ.மாறனும் மற்றும் 9 சுயேச்சைகளும் போட்டியிடுகிறார்கள்.

அதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில நாட்களாக ஏற்காடு தொகுதியில் பிரசாரம் அனல் பறந்தது. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 28 ஆம் தேதி ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து 9 இடங்களில் சூறாவளி பிரசாரம் செய்தார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 29 ஆம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் திமுக வேட்பாளர் மாறனுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கடந்த 3 நாட்களாக திறந்த வேனில் சென்று அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு ஆதரவாக கடந்த 15 நாட்களாக தொகுதியில் முகாமிட்டு இருந்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வெளிமாவட்டத்தினர், தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி மாலை 5 மணிக்கு பின்னர் வெளியேறினார்கள்.

இதனால் தொகுதியில் ஆங்காங்கே வீடு, பங்களா, மண்டபம் ஆகியவற்றில் தங்கி இருந்த நிர்வாகிகள் கார்களில் சாரை, சாரையாக வெளியேறினார் கள். வெளியாட்கள் யாரும் வெளியேறாமல் பதுங்கி இருக் கிறார்களா? என திருமண மண்டபம், சமூக நலக்கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

வாக்குப்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. 269 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இணையதளத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. இணையதள வசதி இல்லாத 21 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசின் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

தமிழக தேர்தல் வரலாற்றில் ஏற்காடு இடைத்தேர்தலில் முதன் முதலாக, ‘மேற்கண்ட வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்ற ‘நோட்டா’ பொத்தான் இடம் பெறுகிறது.

இது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசி வேட்பாளருக்கு அடுத்தபடியாக அமைகிறது. அதன்படி, ஏற்காடு தொகுதியில் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 12-வது சின்னமாக, ‘மேற்கண்ட வேட்பாளர்கள் யாருக் கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்ற ‘நோட்டா’ பொத்தான் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல் நடைபெறும் ஏற்காடு தொகுதியில் மட்டும் நாளை (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று மாலை 5 மணி முதல் நாளை (4 ஆம் தேதி) வரை அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்காடு தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளுமே பதற்றமானவை என தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீன்குமார் அறிவித்துள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொகுதி முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புபடை, மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் சேலம் மாவட்ட போலீசார், வெளிமாவட்ட போலீசார் என 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான சேலம்-ஏற்காடு ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது.

அதைத் தொடர்ந்து வருகிற 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மதியத்திற்குள் முடிவு அறிவிக்கப்படுகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!