Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்ச நீதிமன்றத்தில் நெற்றியடி வாங்கியவர் கருணாநிதி: ஜெயலலிதா

உச்ச நீதிமன்றத்தில் நெற்றியடி வாங்கியவர் கருணாநிதி: ஜெயலலிதா
சென்னை , ஞாயிறு, 1 மார்ச் 2009 (16:20 IST)
உச்ச நீதிமன்றத்திடம் நெற்றியடி வாங்கியவர் கருணாநிதி என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை திசை திருப்புவதற்காக கருணாநிதியால் கேள்வி-பதில் என்ற போர்வையில் வெளியிடப்பட்ட அறிக்கை தோல்வியிலேயே முடிந்துள்ளது.

‘ஆட்சியை கலையுங்கள்’ என்று எங்கே செல்ல வேண்டும், யாரிடம் முறையிட வேண்டும் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை என்று கருணாநிதி கூறியிருக்கிறார். எங்கே செல்ல வேண்டும், யாரிடம் முறையிட வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

கருணாநிதி நினைக்கும் இடத்தில் சென்று முறையிடுவது, ‘திருடன் கையில் சாவியை கொடுப்பதற்கு சமம்’ என்பதை அறியாதவர்கள் நாங்கள் அல்ல.

‘இந்திய அரசமைப்புச் சட்டம் முழுவதுமாக மீறப்பட்டிருக்கிறது’ என்று கருத்து தெரிவித்து, ‘திமுக அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வோம்’ என்று கடந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதி உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்த போது, குட்டுப்பட்டு தலை வீங்கியது கருணாநிதியின் நினைவிற்கு வரவில்லை போலும்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்த காவல்துறையினருக்கு அறிவுறுத்தியது யார் என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு, காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் கருணாநிதியிடமிருந்து பதில் இல்லை.

இதுபோன்ற நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட கருணாநிதிதான் கூறியிருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதற்கான அதிகாரம் கருணாநிதியிடம் தான் இருக்கிறது. வேறு யாராவது அறிவுறுத்தியிருந்தால், காவல் துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றாகிவிடும். எனவே, உச்சநீதிமன்ற வினாவிற்கு கருணாநிதி தக்க பதிலை அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil