Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்ச் மாதம் முதல் வாரத்தில் கெஜ்ரிவால் தமிழகம் வருகை - ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிமுகம்

மார்ச் மாதம் முதல் வாரத்தில் கெஜ்ரிவால் தமிழகம் வருகை - ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிமுகம்
, வெள்ளி, 31 ஜனவரி 2014 (17:51 IST)
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார். அப்போது, அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்கிறார்.
FILE

ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டிலேயே நாட்டின் தலைநகராக உள்ள டெல்லி மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்ததுடன், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியும் அமைத்தது.

டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் எழுச்சி பெற்று வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி தலைமையில் தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

இதுவரை, தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கட்சியில் தொடர்ந்து இணைந்தும் வருகின்றனர். இந்த நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. அதாவது, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 15 முதல் 20 தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி முடிவெடுத்துள்ளது. குறிப்பாக, படித்தவர்கள் அதிகம் இருக்கும் மாவட்ட தலைநகரங்களிலேயே அக்கட்சி போட்டியிட விரும்புகிறது.

மேலும், இம்மாதம் இறுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தலாமா? என்றும் விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, மார்ச் மாதம் முதல் வாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வர இருக்கிறார். அவர், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். அப்போது, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil