Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை மீது பொருளாதார தடை கோரி உண்ணாவிரதம்

இலங்கை மீது பொருளாதார தடை கோரி உண்ணாவிரதம்
, சனி, 2 ஜூலை 2011 (16:53 IST)
ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு இணங்க இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்துமாறும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை விதிக்குமாறும் கோரி சென்னையில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

போர்க்குற்றம், இனப் படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் என்ற அமைப்பின் சார்பில், காயிதே மில்லத் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள சாலையில் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை இயக்குனர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து சிங்கள இனவெறி இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதி; ஐ.நா.குழுவின் அறிக்கையை மதித்து இலங்கை இனப் படுகொலை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்து என்று இந்திய மத்திய அரசையும், இலங்கைக்கு எதிரான விசாரணையை உடனே தொடங்கு, அறுபது ஆண்டுக்கால இனப்படுகொலையின் தொடர்ச்சியே அங்கு நடந்த போர்க்குற்றம் என்பதை அங்கீகரி; துயரத்தில் உள்ள ஈழத் தமிழர்களை காப்பாற்று என்று ஐ.நா.அவையைக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோரிக்கைகளை வலியுறுத்தி கவிஞர் இன்குலாப், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மு.வீரபாண்டியன், ஊடகவியலாளர் கா.அய்யநாதன், கோவை ஈஸ்வரன், த.மு.மு.க.வின் ஹாஜா கனி, வழக்குரைஞர்கள் அமர்நாத், கயல், குமாரதேவன், பாண்மாதேவி, ஊடகவியலாளர்கள் டி.எஸ்.எஸ். மணி, அருள் எழிலன், கலைக்கோட்டு உதயம், பாரதி தமிழன் உள்ளிட்ட பலர் பேசினர்.

உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்கிறார்.

இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், பெரியார் திராவிடர் கழகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், தமிழ்த் தேச மாணவர் இயக்கம், தமிழ் மக்கள் பேராயம், தமிழக இளைஞர் கழகம், மே 17 இயக்கம், தமிழ்த் தேசிய மக்கள் இயக்கம், மக்கள் சக்திக் கட்சி, இந்து மக்கள் கட்சி, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம், இந்திய மீனவர் சங்கம், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகளின் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil