மனைவியும், வாரிசுகளும் அவரது நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஏன் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்பது புரியாது. வாரிசுகளாவது வளர்ந்த பிறகு வெளியே சென்றுவிட்டார்கள். ஆனால், மனைவி? குழந்தைகளுடன் கணவரையும் தாங்க வேண்டிய நிர்பந்தம். அந்த காலத்து பெண்மணியான அவர், கடைசி காலம் வரை சேர்ந்து தான் இருக்க வேண்டும் என்று ‘விதியை’ நொந்துகொள்வார்.
ஆனால், ஒரு ஆண்டுக்கு முன்னால் கணவருடன் தனிமையில் பல்வேறு விஷயங்களை மனைவி மனம் விட்டு பேசியப் போது, பத்து வயதில் தனது வீட்டில் நடந்த பாலியல் வன்முறையை கணவர் பகிர்ந்துகொண்டார். அதை சொல்லும் போது, இந்த வயதிலும் அவரிடம் நடுக்கம் வெளிப்பட்டது. கணவரின் மன நோய்க்கு அந்த வன்முறை தான் காரணம் என்பது மனைவிக்குப் புரிய நேரமாகவில்லை. இந்த வயதிலாவது உண்மை வெளிப்பட்டதே என்று நிம்மதியடைந்தார்.
அந்தக் கணவரைப் போன்றே ஏராளமானவர்கள் சமுதாயத்தில் நடமாடுகிறார்கள். எதனால் அவர்களுக்கு அந்த பிரச்சனை வந்தது என்பதை அவர்களால் இயல்பாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்தாலும் வெளியில் சொல்ல முடியவில்லை.