தை பிறப்பின் சிறப்பு!
- ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடத்தில் பார்க்கும் போது,, பூமியை இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள். அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவதுண்டு.
அதில் மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.
அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தக்ஷாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை.
அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடம் சிறந்த நட்சததிரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி.
அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால் உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். எனவே உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.
அந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள் சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில், சேர நாட்டில் எடுத்துக் கொண்டால் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். ஆனால் விளக்கை ஏற்றி ஜோதி என்று காண்பிப்பது ஒரு அடையாளமே, ஆனால் இயற்கையாக இருப்பதை அறிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர்.
மகரம் ஆன்மீக மாதம்!
அதனால் தான் பல சிறப்புகள் வாய்ந்த மகர மாதத்தை ஆன்மீகத்தை போற்றும் மாநிலமான கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை ஒன்றாம் தேதியன்று மாலை அந்த விண் மீன் தெரியும். அன்றைய தினம் கருடன் வட்டமிடும். அதுவும் மகர மாதம் துவங்குவதை குறிக்கும் மற்றொரு அறிகுறி. அந்த விண் மீனின் பெயர் மகர மீன்.
மகர யாழ் என்று ஒரு இசைக்கருவி உண்டு. மகர யாழ் மிக வலிமையானது. அதை மீட்டுவதற்கே மிகுந்த வலிமையும், ஞானமும் வேண்டும். எல்லோராலும் மீட்ட இயலாது. அதுபோன்று மகர மீன், அதுபோல் மகர ராசியில் பிறந்தவர்களை மகரத்தார் நகராழ்வார் என்பர். அவர்களுக்கு ஆளும் குணம் உண்டு. மகர ராசியில் இடம்பெற்றுள்ள ராசிகள் மூன்று, மூன்றுமே சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள். உத்திராடம், திருவோணம், அவிட்டம். திருவோணம் வெங்கடாச்சலபதியின் நட்சத்திரம். திரு ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான். அதாவது திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகத்தின் எதாவது ஒரு மூலையையாவது ஆள்வார்கள் என்பதாகும்.
அவிட்ட நட்சத்திரத்திற்கு “தவிட்டுப் பானையும் தங்கமாகும்” என்ற பழமொழி உண்டு. மூன்று நட்சத்திரங்களுமே மிகச் சிறந்த நட்சத்திரங்கள் ஆகும்.
மகரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. மகரமே சிறந்த வீடு. அதனில் நெருப்பு நட்சத்திரமும் உண்டு, நீர் நட்சத்திரம் உண்டு. உத்திராடமும், அவிட்டமும் நெருப்பு நட்சத்திரங்கள். திருவோணம் நீர் நட்சத்திரம். மகரத்தைப் பற்றி பழைய நூல்கள் கடல் வீடு என்கின்றன. மகரம் ஆழியாகும். ஆனால் ஒரு சில நூல்கள் நெருப்புத் தன்மை வாய்ந்த கடல் வீடு என்றும் கூறுகிறது. அதாவது வெந்நீர் ஊற்றுகள் அதிகம் நிறைந்தது என்று நாம் கொள்கிறோம். கடல் என்றாலே நீர்தான். ஆனால் குளிர்ச்சி அல்ல கொதிப்புதான் அதன் தன்மை. அதாவது இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவது இந்த ராசிக்கு பொருந்தும்.
மகர ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையை விட்டு மாறுபட்டு இருப்பார்கள். தாங்கள சார்ந்த நாடு, மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுவர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் வேறு மாதிரி செய்து பார்ப்பவர்கள். அதுதான் மகரத்தின் குணம்.
தைப் பொங்கல்!
மகர மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். சூரியனுக்கும் இயக்கம் உண்டு, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும். ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடுவர். சிவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான் சூரியனும் எதையும் சுற்ற வேண்டாம். மற்ற கோள்கள்தான் சூரியனை சுற்றுகின்றன.எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது.சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் போன்று ஏதாவது பழமொழி உண்டா? இல்லையே. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பதுதானே பழமொழி. எல்லாமே தையில் தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள். தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல்.பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம். பரிகாரத்திற்கும் தையே சிறந்தது!ராஜ ராஜ சோழன் காலத்தில் அந்த மாதத்தில்தான் பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். பல நல்ல திட்டங்கள் அந்த மாதத்தில் துவக்கியுள்ளார்கள். நெற்களஞ்சியத்தில் இருந்து பழைய நெல்களை கொடுத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு புதிய நெல்களை கொள்முதல் செய்து கொள்வர்.நெற்களஞ்சியத்தில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு தானதர்மம் செய்துவிடுவர். தான தர்மங்கள் செய்வதற்கும் உகந்தது தை மாதம்தான். இதை எல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்தில்தான் துவங்குகிறது.தட்பவெப்ப நிலையில் பார்த்தாலும் தை மாதம் சிறந்த மாதகும். குளிரும் இருக்கும், வெயிலும் இருக்கும், எதுவும் கடுமையாக இருக்காது. அதுவே வெகு சிறப்பானது.எனவே சூரியனின் உத்திராயணப் பயணம் துவங்கும் அந்த முதல் நாள் தமிழர் திருநாளாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்தல், புதுமனை புகுதல், புது வேலையில் சேர்வது, புதிய நிறுவனம் தொடங்குதல் போன்ற அத்தனையும் துவங்கினால் அது வெற்றி பெறும். நீண்ட காலம் நிலைக்கும்.சூரியனை வணங்கும் நாளாகவும் தை பொங்கல் விளங்குகிறது. புது அரிசி - கை குத்தல் - அரிசி களைந்து பானையில் வைத்து சூரியனுக்கு நேர வைத்து பொங்கல் பொங்குவர். தை மாதத்தில்தான் சூரியப் பொங்கல் என்கிறோம். மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தையும் வழிபடுவோம். வள்ளுவனையும் வணங்குகிறோம். சித்திரையில் இதுபோன்று தமிழர்களைச் சார்ந்த எந்த விழாவும் இல்லை. வள்ளுவனையும் கொண்டாடுவதில்லை.மகரம் சமாதான வீடு!
அதேபோன்று மகரம் சனியின் வீடு. சனியின் எதிர் கிரகம் செவ்வாய். சனிக்கு செவ்வாயும், சூரியனும் எதிர் கிரங்களாகும். ஆனால் செவ்வாய் சனியின் வீட்டில் உட்கார்ந்து உச்சம் அடைகிறது. தை மாதம் என்பது மகர மாதம். சனியின் வீட்டில் சூரியன் உட்காரும் போது உக்கிரம் அடைகிறது. அந்த இடத்தில் செவ்வாய் உச்சமடைய மகரம் அனுமதிக்கிறது. ஒன்றுக்கு ஒன்று விட்டுக் கொடுக்கிறது. சனி விட்டுக் கொடுத்து சூரியனின் உச்சத்தை ஏற்றுக் கொள்கிறது. சமாதான வீடாகவும் மகர வீடு விளங்குகிறது.
ஜாதிப்படி பிரித்தால் மகரம் சத்ரிய வீடு என்று சொல்லலாம். மகரத்தில்தான் குரு நீச்சமடைகிறார். சூழ்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை. சத்ரியர்கள் தங்களது திறமையை காண்பிக்கலாம். எல்லா தரப்பினருக்கும் மிக உயர்ந்த மாதமாகும்.