பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த முடியாது, தடையை மீறி போட்டி நடைபெறும் என்று தமிழர் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியை காண லட்சக்கணக்கான மக்கள் பார்க்க வருவார்கள். அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு சில நிபந்தனையுடன் நடத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை அனுமதி அளித்தது.
இந்த நிலையில் விலங்குகளை கொடுமைப்படுத்தும் எந்த போட்டியையும் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா? நடக்காதா என்ற குழப்பம் எழுந்த நிலையில், தமிழர் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழர் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு தலைவர் ரித்திஷ்குமார், செயலாளர் ஒண்டிராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீரவிளையாட்டு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விளையாட்டு இருந்ததாக ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.
ஒரு மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 500 ஜல்லிக்கட்டு மாடுகள் வீதம் பல மாவட்டங்களில் இதற்கென்றே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
பாரம்பரியம் மிக்க இந்த விளையாட்டை காண ஒவ்வொரு ஆண்டும் அயல்நாட்டினர் வருகின்றனர். பல கிராமங்களில் இப்போட்டிகள் நடக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த முடியாது, தடையை மீறி இப்போட்டி நடைபெறும். தமிழனின் வீரமும், பாரம்பரிய பண்பாடும் பாதுகாக்கப்பட தமிழர்கள் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு போராடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஐல்லிக்கட்டுக்கு தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரும் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உத்தரவாத்தை ஏற்க மறுத்தது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காநல்லூர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகளவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மிருகவதையும், மனித உயிரிழப்பும் ஏற்படுவதாக பிராணிகள் நல அமைப்புகள் சார்பில் புகார்கள் குவிந்ததையடுத்து, இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
ஆயினும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சி வழக்கம்போல் நடந்தது. உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை.
இந்தப் பிரச்சனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பிராணிகள் நல வாரிய உறுப்பினருமான மேனகா காந்தி உள்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் தடை கோரி அளித்த மனுவில், 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் மாடுகள் வதைக்கப்படுவதோடு, அவற்றுக்குப் போதை மருந்துகள் அளிக்கப்படுவதாகவும், மாடு பிடிப்போருக்கும், பார்வையாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு இன்று நடந்தது. அப்போது,கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவகர் உள்ளிட்ட அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.
இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விதித்த தடை அப்படியே தொடரும். 'ரேக்லா' போட்டியை பாதுகாப்புடன் நடத்த வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், மிருக வதை செய்யும் எந்த போட்டியும் நடத்த அனுமதி கிடையாது என்று உச்ச நீதிமன்ற முதன்மை அமர்வு தீர்ப்பளித்தது.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த மதுரை மாவட்ட மக்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.