'
சண்டைக்கோழி' பொங்கல!
காளைகளுடன் மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு எந்த அளவுக்கு பிரபலமோ, அதே அளவுக்கு பிரபலம் கொண்டது கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சேவல் சண்டை விளையாட்டு.
இங்குள்ள பூலாம்வலசு கிராமத்தில் தான் இந்த சேவல்சண்டையை பார்க்க சுற்றுவட்டார கிராமமே வந்து காத்திருக்கும்.
சுமார் 2 கிலோ எடையுள்ள சேவல்களை தேர்வு செய்து, தினந்தோறும் கம்பு, சோளம் என ஆரோக்கியமான தீவனங்களை கொடுத்து வளர்க்கின்றனர். தினந்தோறும் 1 மணி நேரம் பிற சேவல்களுடன் மோதவிட்டு சண்டை பயிற்சி அளிக்கின்றனர். தண்ணீரில் முக்கி எடுத்து கோழிகளை களத்தில் இறக்கும் போது, அவற்றின் ஆக்ரோஷம் எதிரில் நிற்கும் கோழிகளை கொத்தி கிழித்துவிடும்.
பொங்கல் தினத்தில், இந்த கோழிகளின் கால்களில் கத்திகளை செருகி, களத்தில் இறக்குகின்றனர். ஆக்ரோஷமாக ஆரம்பிக்கும் இந்த சண்டை, பல நேரங்களில் மணிக் கணக்கிலும் நீடிக்கும்.
இறுதியில் வெற்றி பெறும் சேவல் பரிசுகளை குவிக்கும். போராடி தோற்கும் சேவல், கறிச்சட்டியில் குழம்பாக கொதிக்கும்.
இது பார்வையாளர்களை பொருத்தவரை வெறும் கோழிச்சண்டையாக இருந்தாலும், நிஜத்தில் மனிதர்களிடையே சமத்துவத்தை வளர்க்கும் ஒரு நல்ல பண்டிகை!
காரணம், இந்த போட்டிகளில் பங்கேற்பவர்களிடையே எந்த பாகுபாடும் கிடையாது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சியில் , பரம்பரை எதிரிகள் கூட விரோதத்தை மறந்து நண்பர்களாக, சகோதரர்களாக மாறிய கதை நிறைய உண்டு.
'ரேக்ளா' பொங்கல்!
லால் குடியில் நடக்கும் ரேக்ளா போட்டிகளும் உலகப் பிரசித்தம். இங்கு காளைகள், குதிரைகள் பூட்டிய ரேக்ளா போட்டிகளுடன் மின்னல் வேகத்தில் வீரர்கள் பறக்கும் பைக் ரேஸும் திரில்லான அனுபவம்.
அதனால் தான் இங்கு நடைபெறும் போட்டிகளை 'முப்பெரும் வீரவிளையாட்டுகள்' என்றே அழைக்கின்றனர்.
இங்கு பங்கேற்கும் காளைகள், குதிரைகளுக்கு எப்படி ஜாதி, மத வேறுபாடு கிடையாதோ அதேபோல் தான் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கும் எவ்வித பாகுபாடும் கிடையாது.
நீண்ட நாள் பகை கொண்ட இரு தரப்பினர் ஒன்று சேர வேண்டுமெனில், இரு போட்டிகளில் கலந்துகொண்டால் போதும், தானாகவே ஒன்று சேர்ந்து நட்புகொண்டுவிடுவார்கள் என்பது நடைமுறை உண்மை.
சுயம்வர பொங்கல்!
கொங்கு மண்டலமான கோவையில் கொண்டாடப்படும் பொங்கல், சமத்துவத்தை மட்டுமல்ல திருமண உறவுகளையே உருவாக்கும் அளவுக்கு பெருமை பெற்றது.
காரணம், இந்த மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருப்பராயன் கோயிலில் இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் வழிவைத்து வழிபடுவர். அப்போது, இளம் பெண்களுக்கு கருப்பராயன் சாமி திருமண வரம் கொடுப்பார் என்பது மூத்தோர் நம்பிக்கை.
அதே நேரத்தில் கோயிலின் மற்றொரு புறத்தில் இளம் காளையருக்கான உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகளும் நடைபெறும். இதில் வெற்றிபெறும் காளையருக்கு ஏராளாமான பரிசுகள் குவியும்.
கன்னியரும், காளையரும் ஒரே இடத்தில் கூடி பொங்கல் கொண்டாடும் போது, சாமி வரம் கொடுக்கிறாரோ இல்லையோ, திருமண வரம் கிடைப்பது மட்டும் நிச்சயம்!
பொங்கல் பண்டிகை சமத்துவத்தை வளர்க்கும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா, என்ன...?
வெளிமாநிலங்களில் பொங்கல்!
உறவுகளை வளர்க்கும் இந்த பொங்கல், வட மாநிலங்களில் 'சங்கராந்தி' என்ற பெயரில் கோலமாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் அறுவடைத் திருவிழாவாகவும், உழைப்பின் பெருமையை போற்றும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
நம்மூரில் ஜல்லிக்கட்டு, கோழிச்சண்டைகள், ரேக்ளா ரேஸ் போன்று, வட மாநிலங்களில் பட்டம் பறக்கவிடுவது மிகப்பெரிய போட்டியாக கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலும் இங்குள்ள மக்கள் கடற்கரை, பொது மைதானங்கள் போன்ற இடங்களில் கூடி போட்டி போட்டுகொண்டு பட்டம் பறக்கவிடுகின்றனர்.
அன்றைய தினத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கூட பட்டங்கள் பறந்துகொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜனவரி 14ம் தேதி 'சர்வதேச பட்டம்விடும் திருவிழா'வாகவே கொண்டாடப்படுவது சிறப்பான அம்சம்.
இந்த விழாக்களின் மூலம், பட்டம் பறக்கிறதோ இல்லையோ, அங்கு சமத்துவமும், சகோதரத்துவமும் இறக்கை கட்டி பறக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், உ த்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் சமத்துவம் பொங்குகிறது.
வெளிநாடுகளில் பொங்கல்!
உழைப்பை போற்றும் பண்டிகை என்பதால் வெளிநாடுகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், பண்டிகையின் பெயரும், கொண்டாடப்படும் தேதியும் தான் மாறுபடுமே தவிர, பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் சமத்துவம் வளர வேண்டும் தான்.
அமெரிக்கா, கொரியா, ஜப்பான், சீனா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டை நாடான இலங்கை போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளில் பொங்கல் தனி சிறப்பு பெற்றவை.
முடிவாக...
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை சமத்துவத்தை மலரச் செய்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எனவே, இந்த இனிய பொங்கல் திருநாளில் பொங்கல் பொங்கட்டும். ஜாதி, மத பேதம் நீங்கி சமத்துவம் வளரட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!