சரியாக மணி 12 ஆகும்போது வாசலில் பொங்கலிட்டு சூரியனுக்கு தீப ஆரத்தி எடுத்து பொங்கலோ பொங்கல் என்று எழுப்பும் ஒலி அந்த சூரியக் கதிர்களைத் தொட்டுவிட்டு திரும்பும். வீட்டிற்குள் ஆரத்தியை கொண்டு வந்து காட்டி பின்னர் பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு வீட்டின் பெரியவர், ஒவ்வொருவருக்காகவும் எடுத்து வைத்திருந்த ஆடைகளை ஆசீர்வதித்து வழங்குவார். இதற்குத்தானே இவ்வளவு நேரம் காத்திருந்தது என்ற மகிழ்ச்சியில் கொடுத்த புத்தாடையை நொடிப்பொழுதில் உடுத்திக் கொண்டு வந்து உணவருந்த அமருவோம். அதை ஏனோ தானோ வென்று மென்று முழுங்கியதும் நமது அடுத்த குறிக்கோள் பக்கத்து அக்கத்து வீடுகளில் உள்ள நமது தோழர்கள்தான். அவர்களுக்கு நமது ஆடைகளை காண்பிப்பதும், அவர்களது ஆடைகளை பார்த்து மகிழ்வதிலும் ஒரு தனி ஆனந்தம்.சரி புத்தாடை ஆசை அடங்கியதும்தான் நமது வீட்டில் இருக்கும் கரும்பு, இனிப்புகள் மீது நமது பார்வை திரும்பும்
கரும்புகளை வெட்டி வெட்டி தீர்த்து அப்பாவை மற்றொரு கருப்புக் கட்டை வாங்கி வரச் சொல்லி நச்சரிக்கும் வரை பிள்ளைகளின் கொண்டாட்டங்கள் ஏராளம் ஏராளம்.
மாட்டுப் பொங்கல்!
மாட்டுப் பொங்கலன்று தாங்கள் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து அவைகளுக்கு உகந்த உணவினை அளித்து, விவசாயத்திற்கும், குடும்பத்திற்கும் உதவிய மாட்டிற்கு நன்றி சொல்கின்றனர் விவசாயிகள்.
அதேபோல காணும் பொங்கலன்று நமது உற்றார், உறவினர்களை அவர்களது இல்லங்களுக்குச் சென்று பார்த்து ஆசி பெற்று பொங்கல் இனாம் வாங்குவதும் வழக்கம். அத்தைகள், மாமன்களிடம் எல்லாம் பொங்கல் இனாம் வசூலிக்காவிட்டால் நமக்கு பொங்கல் கணக்கு முடியவே முடியாதே.
இதையெல்லாம் அனுபவித்த நமக்குத்தான் தெரியும் போகியும், பொங்கலும், மாட்டுப் பொங்கலும் தமிழர் திருநாள் என்று.
குக்கரில் சிறைப்பட்ட பொங்கல்!
இன்று நமது பிள்ளைகளோ போகி என்றால் ஏதோ இன்றைய குப்பையை குப்பைத் தொட்டியில் போடாமல் கொளுத்துவது என்று எண்ணுகின்றனர். அன்று ஒரு நாள் விடுமுறைக் கணக்கில் சேர்த்துக் கொள்கின்றனர் அவ்வளவே.
நமக்கு அப்போதிருந்த அந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் இன்று மறைந்து, போகியும் பொங்கலும் பிள்ளைகளுக்கு தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் செலவழிந்து கொண்டிருக்கின்றன.
ஆசிர்வதித்து புத்தாடைகளை அளிக்க வீட்டில் பெரியவர்களும் இல்லை. பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்க வீட்டு வாயில்களும் இல்லை.
காணும் பொங்கல் அன்று கடற்கரையும், திரையரங்குகளும், பூங்காக்கள் மட்டுமே நிரம்புகின்றன. கூட்டத்தில் சிக்கி நாம் படும் திண்டாட்டமோ அதிகம். உற்றார் உறவினரைக் காண வேண்டிய காணும் பொங்கலன்று, வேலி கட்டி வைத்திருக்கும் கடற்கரையைக் காண அல்லவா நாம் துடிக்கின்றோம்.
பானையில் பொங்கி வழிந்த பொங்கல் இன்று குக்கருக்குள் சிறைபட்டுக் கொண்டிருக்கின்றது. பொங்கலோ பொங்கல் என்று நாம் இட்ட சப்தத்தை இன்று குக்கர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பொங்கல் போன்றுதான் நமது பிள்ளைகளின் பொங்கல் கொண்டாட்டங்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அலைந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டிலிருந்தாவது பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளை கூடிக் கொண்டாடி ஆனந்தம் அடைவோம்.