Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ... என் சிட்டுக் குருவியே!

சுரேஷ் வெங்கடாசலம்
வியாழன், 3 மார்ச் 2016 (15:35 IST)
ஓ... என் சிட்டுக் குருவியே!
என் மனதில் சிறகடித்து
இதய சிம்மாசனத்தில் அமர்ந்தாய்!
இத்தனை சுறுசுறுப்பை நீ எங்கே கற்றாய்
மெய்சிலிர்க்க வைக்கும் உன் பேரழகால்
எப்போதும் என்னை ரசிக்க வைத்தாய்!
 
உன் அழகான கண்களில் நான் சொக்கி வீழ்ந்தேன்
உன் சிறிய அழகான றெக்கையை அசைத்து
என்னை எப்போதும் மகிழ்விக்கிறாய்..
 
இந்த காலத்து
மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள்
அவர்களின் கைகளில்
பிடிபட்டு விடாதே...
 
எச்சரிக்கையாக இரு
உன் சிறகை ஒடித்து விடுவார்கள்
உன் தலையில்
பெரிய சுமையை ஏற்ற முயல்வார்கள்
 
உன்னில் ரத்தம் வடியவைத்து
வேடிக்கை பார்ப்பார்கள்
உனக்கும் கூட கடன் கொடுத்து
வாழ்நாளெல்லாம்
வட்டி கட்ட சொன்னாலும் சொல்வார்கள்!
 
அடுத்தவர்கள் படும் துன்பத்தைக் கண்டு
அதிகப்படியாக
அனுதாபப்படுவார்கள்
கண்ணீரைத் துடைக்க நீளும் கைகளை தட்டி விடுவார்கள்!
 
ஏராளமாக பிரிவினைகைளைச் சொல்வார்கள்
இவர்களிடம் ஏமார்ந்தவிடாதே
உன்னையும்
கொள்கைப் பரப்புச்  செயலாளராக்க முயலவும் கூடும்
 
ஓ... என் சிட்டுக் குருவியே...!
இந்த மனிதர்களிடம் இருந்து தள்ளியே இரு
 
இவர்களுள் பெரும்பாலானவர்கள்
கோழைகள், பயந்து நடுங்குபவர்கள்
யாரேனும் மிரட்டினால் பயந்து நடுங்குபவர்கள்
 
உனக்கு தொல்லை நேர்ந்தால்
உன்னை ஒருபோதும் காப்பாற்ற மாட்டார்கள்
வேடிக்கை பார்ப்பது மட்டுமே அவர்களால் முடியும்
 
இவர்கள் மெத்தப் படித்திருப்பார்கள்
ஆனால் உலகம் தெரியாது!
வீரம் பிறந்திருக்காது! கொடுமைகளைக் கண்டு
கோபப்படத் தெரியாது
அப்படியே கோபப்பட்டாலும்
அந்த கொடுமைகளுக்கு விடைசொல்லத் தெரியாது
 
ஓ... என் சிட்டுக் குருவியே!
மைக் பிடித்து மணிக்கணக்காகப் பேசும் இவர்களை
நெருங்கி விடாதே
வெறும் பேச்சு பேசியே
உன்னை நோகடித்து கொன்று விடுவார்கள்
 
உன் அழகிய தோற்றத்தை அவர்களுக்கு ரசிக்கத் தெரியாது
உன்னை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது
என்று
யோசிக்க மட்டுமே அவர்களால் முடியும்.
 
உன் சிறகை உயர்த்தி வானில் பற
மனிதர்களைக் கண்டு பயந்துவிடாதே
உயர உயர பறந்து வெற்றி கொள்
உன்னைப் பார்த்து இவர்கள் வெக்கித்
தலை குனிய வேண்டும்
அன்பொழுகும் உன் இயத்தை சுமந்தபடி
இவர்களின் மனோபாவத்தை
உடைத்தெறிய முயற்சி செய்!

இப்போதும் சொல்கிறேன்...
அவர்களின் கைகளில்
ஒருபோதும் சிக்கிக் கொள்ளாதே
 
ஓ... என்னருமை சிட்டுக் குருவியே...
கவனமாய் இரு...!

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments