வாணி ஜெயராம் பாடிய ஒரு உருது கஜலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து சினிமா விரும்பி என்ற பெயரில் வாசகர் ஒருவர் அனுப்பிபுள்ளார்.
ஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு
பெரும் பிழை ஏதும் இல்லை உன்னிடமோ அன்றி
என்னிடமோ ஆயின்
வெறும் வாயை மெல்லுவோர் அவல் கிடைத்தால் விடுவாரோ?
சந்திப்பதிலோ பழகுவதிலோ அப்படி ஒன்றும் தவறு இல்லை;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார்!
என் மனதைப்பார், முகவெட்டை அல்ல!
முகச்சாயல் எல்லாம் காலச் சுவடுகளால் மாறி விடுமே!
உன்னைக் காதலிக்கிறேன் என்ற எந்தப் பேச்சையும் நம்பாதே!
வெட்டி வார்த்தையும் சில சமயம் வாய்வழி வரத்தானே செய்கிறது!
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார்!
ஊமைக்காதல் ஒன்றினை இவ்வுலகோர்
அழகி (ஆண் மயக்கி ?) ஒருத்தியின் அழைப்பென்று நினைத்தார்;
நான் பேசும் பாணியை இணக்கம் என்று திரித்தார்;
என் மௌனத்தை சம்மதம் என்று கதைத்தார்;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார்!
நீ என்னருகேதான் ஆயினும் என்னவன் இல்லையே!
காலம் உன்னை என்னிடம் அடமானம் அன்றோ வைத்தது;
(எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்ள!)
உன் உள்ளத்தில் வேறு எவளோ உறைகிறாள் போலும்!
விட்டுத் தள்ளு! காதல் எனதுதானே! உனக்கென்ன நட்டம்!
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார்!