கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த 2 ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியிட்ட 70 கவிதைகளை தொகுத்து `மஞ்சணத்தி' என்ற பெயரில் கவிதை புத்தகம் தயாரித்துள்ளார். இந்த கவிதை தொகுப்பு புத்தகத்தை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாசரம் பள்ளி வளாகத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட்டார். அதை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் ராஜாமணி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
விழாவில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்ற கிராமத்தில் பிறந்து விருதுநகரில் பள்ளி படிப்பை முடித்து, மதுரையில் கல்லூரி படிப்பை முடித்து, சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக 12 ஆண்டுகள் திறமையாக அவர் பணியாற்றியுள்ளார்.
அவருக்கு, மகாகவி பாரதி விருது உள்பட பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. அவரின் கவிதைகளின் சில வரிகள் கல்லூரி பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் முதல் முதலாக கவிதை படிக்க காரணம் என்னவென்றால், உலகமே தந்தைதான் என்று எண்ணியிருந்த நேரத்தில், தந்தை தங்கபாண்டியன் திடீரென மறைந்துவிட்டார். அந்த சோகம் தாங்க முடியாமல் முதல் முதலாக கவிதையாக எழுதி வெளியிட்டார்.
தமிழச்சி தங்கபாண்டியன் ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றவர். அவரது குடும்பமே கழக குடும்பம் ஆகும். தமிழச்சி தங்கபாண்டியன் அரசு பணியை விட்டார். அவர் தந்தை தங்கபாண்டியனும் அரசு பணியை ஒதுக்கிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார்.
தமிழச்சி தங்கபாண்டியன் வருங்காலத்தில் சிறப்பான அரசியலில் உச்சமான நிலைக்கு செல்வார். இசை, நாட்டியம், நாடகம் மற்றும் ஒளிக்காட்சி ஆகியவை மூலம் மஞ்சணத்தி கவிதை புத்தகம் விளக்கம் இங்கு காண்பிக்கப்பட்டது. இதுவரை இப்படி ஒரு புத்தக வெளியீட்டு விழாவை நான் கண்டு ரசித்தது இல்லை.
ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்வது உண்டு. ஆனால், தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெண்ணுக்கு பின்னால் 2 ஆண்கள் துணை நிற்கிறார்கள். ஒன்று அவரது தந்தை மறைந்த தங்கபாண்டியன், மற்றொன்று அவருடைய வாழ்க்கை துணைவர். எனவே, அவரது கணவரை நான் பாராட்டுகிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.