கலைவாணி உன்னுடைய பொற்பாதம் தீண்டி
நிலையான பைந்தமிழைக் கற்றேன் தலையான
உன்புகழை நாடெங்கும் போற்ற பொழுதெல்லாம்
கண்விழித்து பாவடிப்பேன் நான்
முறையான செந்தமிழை உன்னாலே கற்று
குறைவில்லா மென்புலமை பெற்றேன் இறையான
உன்வடிவை நெஞ்சுக்குள் வைத்தே நிறைவான
பண்வடிப்பேன் எந்நாளும் நான்
நிலையான உன்னுருவை நெஞ்சுக்குள் வைத்து
அலைபாயும் என்மனதை தைப்பேன் மலையாகும்
என்தவத்தை கண்டபின்பு நீயும் மலைத்திடுவாய்
என்னையுமுன் நெஞ்சில் நிறுத்து
விடையில்லா கேள்விகளை கேட்டிடுவாய் நீயும்
விடையறியா சூனியமாய் நானும் விடையறியும்
பக்குவத்தை நானறிய செய்து தடைகளெல்லாம்
போக்கிடுவாய் நானறிந்த நீ