கவிமழையில் நனைந்திடுவா கலைமகளே நிதமும்
கடலலையில் உன்சிரிப்பை பார்த்திடுவேன் தினமும்
பூக்களிலே உன்முகத்தை காட்டிடுவாய் நாளும்
பாக்களிலே உன்னுருவம் கண்டிடுவேன் நானும்
மனமுருகி கவியெழுதி மனங்குளிர வைப்பேன்
கனவினிலும் உன்புகழை அரங்கேறச் செய்வேன்
பகலிரவாய் கண்விழித்து பாட்டெழுத முனைவேன்
மனநிறைவாய் கவிமகளை கரம்கூப்பி தொழுவேன்
விதவிதமாய் காட்சிவரும் உனைஎண்ணிப் பார்த்தால்
ஒருவிதமாய் மயக்கம்வரும் உன்பெயரைக் கேட்டால்
சுரம்சுரமாய் தேடிவரும் உன்மனதை நினைத்தால்
சரம்சரமாய் தோடியாகும் உன்புகழைக் கோர்த்தால்
வானம்வரை அடுக்கிடுவேன் நான்வடிக்கும் நூலை
வாழும்வரை தொடுத்திடுவேன் நாதனது வேலை
வாடும்வரை கொடுத்திடுவேன் உனக்கான நாளை
வாழ்த்திடநீ வந்துவிடு தினந்தோறும் காலை