அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்ற இந்திய வம்சாவழி பெண்களும், தகவல் தொழில்நுட்பத்தின் மைய இடமாகக் கருதப்படும் சிலிகான் வாலியில் வெற்றிகரமாக தொழில் செய்துவரும் அமெரிக்க இந்திய மகளிர் தொழில்நுட்ப நெறிஞர்களும் இந்தியாவில் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ராதா ஆர். பாசு, புனிதா பாண்டே, லதா கிருஷ்ணன் போன்ற தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறப்பாக தொழில் நடத்திவரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் தங்களின் கிளைகளை உருவாக்கியுள்ளனர்.
குறைந்த செலவில் தங்கள் நிறுவனத்தின் பணிகளை இந்தியாவில் செய்து முடித்துக் கொள்ளும் நோக்கத்திற்காக தாங்கள் தங்கள் நிறுவனத்தின் கிளைகளை இங்கு துவக்கவில்லை என்று கூறும் சப்போர்ட் சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் ராதா பாசு, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா காணப்போகும் பெரும் முன்னேற்றத்தில் தாங்களும் பங்கேற்கப் போவதாகக் கூறியுள்ளார்.
இவரைப் போலவே பல வணிக நெறிஞர்களும், அமெரிக்காவில் பிறந்து படித்து அங்கு பணியாற்றிவரும் தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களும் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கவும் இங்கு வந்து பணியாற்றவும் பெரு விருப்பம் கொண்டுள்ளனர்.