தென்னிந்தியாவைச் சேர்ந்த ஏராளமான கட்டடத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு விமானப் பயணச் சீட்டு வாங்கப் பணமில்லாமல் துபாயில் தவித்து வருகின்றனர்.
விசா கெடு முடிந்த அயல்நாட்டுத் தொழிலாளர்கள் உடனடியாகத் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று ஐக்கிய அரபு நாடுகள் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி துபாயில் பல்வேறு பணிகளில் உள்ள அயல்நாட்டுத் தொழிலாளர்கள் விரைவாக தங்களின் நாடுகளுக்குத் திரும்பத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கராமா பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த சில நாட்களாக ஏராளமான கட்டடத் தொழிலாளர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் கடவுச்சீட்டு, விசா உள்ளிட்ட எல்லா ஆவணங்களும் உள்ளன. ஆனால் விமான பயணச் சீட்டு வாங்குவதற்குத் தேவையான பணம்தான் இல்லை. ஆய்வுக்கு வரும் அதிகாரிகளின் பிடியில் எப்போது சிக்குவோம் என்ற கவலையில் உள்ளனர்.
''நான் கடந்த 15 நாட்களாக இங்கு உள்ளேன். என்னிடம் ஒருவேளை சாப்பாடு வாங்கக்கூட பணமில்லை. எனது நாட்டிற்குப் போக வேண்டும் என்று நான் நினைத்தாலும் விமான பயணச் சீட்டு வாங்க முடியவில்லை'' என்று சிறீதர் என்பவர் தெரிவித்தார்.
மற்றொரு தொழிலாளியான ராம்பாபு ''நான் முன்பு பணியாற்றிய கட்டடநிறுவனத்திற்குச் சென்று எனக்கு வரவேண்டிய பணத்தைக் கேட்டேன், கிடைக்கவில்லை. நாடு திரும்புவதற்கு கடனாவது தருமாறு கேட்டேன், அதுவும் கிடைக்கவில்லை. இந்தியாவிற்குப் போய் எனது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கள் அனைவருக்கும் அதுதான் கவலையாக உள்ளது'' என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதுகுறித்து துபாயில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் நலத்துறை அலுவலர் வேணு ராஜ்மோனியிடம் கேட்டதற்கு, ''இந்த விடயத்தை நாங்கள் உடனடியாக கவனிக்கிறோம். எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வோம்'' என்றார்.
இதற்கிடையில் துபாயில் வசிக்கும் சில பணக்காரர்கள் தொழிலாளர்களுக்கு இலவச விமான பயணச் சீட்டுகளை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளனர்.
அந்த நன்கொடையாளர்களைக் கண்டறிந்து உதவிகளைப் பெற்றுத் தருவதற்கு தொழிலாளர் துறையின் நிரந்தரக் குழு நடவடிக்கை எடுக்கும் என்று குடியேற்றத்துறை அதிகாரி முகமது அகமது அல் மாரி தெரிவித்துள்ளார்.