இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதாரப் பணிகளில் இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் கல்வி பெறும் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் அந்நாட்டு சுகாதாரத் துறை கொணர்ந்த வழிகாட்டு நடைமுறைகள் சட்டத்திற்கு புறம்பானது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனால் அங்கு பணிபுரியும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு எதிரான பிரச்சனையில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் சுகாதாரப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவர்களை தொழில்நுட்பத் திறன்மிகுந்த பணியாளர்களை குடியமர்த்தும் முறையின் கீழ் நியமனம் செய்து வருகிறது. இவ்வாறு நியமனம் செய்யப் படும் மருத்துவர்களுக்கு 4 ஆண்டுகளில் நிரந்தரமாக அங்கு குடியேறவும் அனுமதி வழங்கப்படும் என்ற உத்திரவாதம் அதில் உள்ளது.
ஆனால்,தற்போது சுகாதாரத்துறை பயிற்சி மருத்துவர்களை நியமனம் செய்வதில் இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளில் உள்ள மருத்துவ கல்வி நிலையங்களில் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒரு வழிகாட்டு முறையை அறிவித்தது.
இந்த முறையால் அயல் நாடுகளில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கியது. இதனை எதிர்த்து இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் கூட்டமைப்பு அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பால், இங்கிலாந்தில் பணியாற்றும் இந்திய வம்சாவழியினர் மற்றும் குடியேறிய மருத்தவர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் இங்கிலாந்து மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக அதிகம் போட்டியை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை கருத்து தெரிவித்துள்ளது,