அயல்நாடு வாழ் இந்தியர்களின் கூட்டமைப்பின் ஆறாவது மாநாடு இன்று டெல்லியில் துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியா மூன்றாவது முறையாக இந்த மாநாட்டை நடத்துகிறது. கடந்த ஆண்டும் இந்த மாநாடு டெல்லியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டின் ஒவ்வொரு நாளிலும் 5 அமர்வுகள் நடைபெறவுள்ளன. தொடக்க விழாவைத் தொடர்ந்து நடைபெறும் சமூக வளர்ச்சியும், மாற்றங்களும் என்ற அமர்வில் சுகாதாரம் - கல்வி ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால நிகழ்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முதலீடு, உள்கட்டமைப்பு தொடர்பான மாற்றம் - வளர்ச்சி குறித்து இரண்டாவது அமர்வில் விவாதிக்கப்படுகிறது. அதேபோல முதல் நாளான இன்று அறிவுப் பொருளாதாரம் கலாச்சாரம், பெண்கள் தன்னிறைவு அடைதல், தலைமைப் பண்பு வகிக்கும் போது எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்தும் தனித்தனி அமர்வுகள் நடைபெறுகிறது.
வர்த்தகம் - வணிகத்திற்கான வாய்ப்புகள், மாநிலங்கள் வளர்ச்சித் திட்டத்தை எதிர்கொள்ளும் போது எதிர்கொள்ளும் சவால்கள் - பங்குதாரர் ஆவதற்கான வாய்ப்புகள், கிராமப்புற பெண்கள் தன்னிறைவு உள்ளிட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைப்பெறவுள்ளன. இம்மாநாட்டில் மாநில முதல்வர்கள் நரேந்திர மோடி, ஷீலா தீட்ஷித், பூபேந்தர் சிங் ஹோடா, மதுகோடா, நவீன் பட்நாயக், புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டு மாநிலங்கள் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தும் போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உரையாற்றுகின்றனர்.
மேலும் வளைகுடா நாடுகள், ஆசிய - பசிபிக், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் 5 நடவடிக்கைக் குழுக்களின் சிறப்பு அமர்வு நாளை நடைபெறுகிறது. மாநாட்டின் நிறைவு நாளன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவும், பரவாசி பாரதீய சமான் விருதுகளையும் வழங்குகிறார். இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாநிலங்களில் முதலீட்டையும், வர்த்தகத்தையும் மேம்படுத்தும் வகையில் சந்தையிடம் என்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு அயல்நாடு வாழ் இந்தியர் நல மையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐந்து நாள் பயணமாக மாலத்தீவு பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் இன்று காலை டெல்லி வந்தார். இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார்.
இந்தியாவும், மாலத்தீவும் கடந்த 1983 ஆம் ஆண்டு இருமுனை வரிவிதிப்பை தடுக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொண்டன. ஆனால் இந்த ஒப்பந்தம் வரி முறைகேடு செய்ய உதவுவதாக மாலத்தீவு குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்தியா இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய மறுத்து வருகிறது. நீதிச் சேவைத் துறையில் மாலத்தீவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அங்கு சுமார் 25,000 அயலகப் பணி நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இந்தியாவில் இருந்து குடிப்பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவு மார்ச் - 12 ஆம் தேதி தேசிய தினத்தைக் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இநத கொண்டாட்டங்களின் போது அந்நாட்டின் அரசியல், சமூக உரிமை போராட்டத்துக்கு வித்திட்ட மகாத்மா காந்தி, இந்திய சுதந்திரப் போராட்டம் ஆகியவற்றுக்கு மாலத்தீவு மரியாதை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.