சுனாமியால் வேதனையடைந்து வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய வகையில் உதவும் கரங்கள் அமைப்பு "பிரசாந்தித் திட்டம்" என்ற பெயரில் வீட்டு வசதி குடியிருப்பை கட்டித் தந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கானாத்தூர் அங்காளம்மன் குப்பத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனை செவ்வாயன்று(டிச.26) திரைப்பட நடிகர் திரு. சிவக்குமார் திறந்து வைத்தார். காஞ்சிபுர மாவட்ட ஆசிரியர் திரு. பிரதீப் யாதவ் இத்திட்டத்தின் விவரங்களை எடுத்துரைத்தார். குடியிருப்புகளின் சாவிகளை உதவும் கரங்கள் நிறுவன செயலர் திரு.வித்யாகர், அமெரிக்காவில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் டாக்டர். பத்மினி, நடிகர் திரு.சிவக்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவ குடியிருப்புகளில் ஒன்றான கானாத்தூர் அங்களாம்மன் குப்பத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. சுனாமி மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக இந்த கிராமத்தை உதவும் கரங்கள் அமைப்பு தத்தெடுத்து அம்மக்களுக்கு நிரந்தர குடியிருப்புகளை கட்டித் தர முடிவெடுத்தது. இதற்காக தற்போது உள்ள கிராமத்தில் இருந்து 400 மீட்டருக்கு அப்பால் குடியிருப்புகளை அமைக்க மூன்று ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய திரு.வித்யாகர் உதவும் கரங்கள் அமைப்பு, துயறுற்ற மக்களை பாதுகாத்து அவர்களுக்கு புது வாழ்வு அளித்து வருவதாக கூறினார். இதற்கான நன்கொடையாளர்களுடன் இணைந்து பணியாற்ற உதவும் கரங்கள் அமைப்பிற்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர்களின் உதவி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நல்ல உள்ளம் படைத்த ஒருவர் அன்பளிப்பாக அரசுக்கு அளித்த நிலத்தில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கின. மொத்தம் 72 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் 400 சதுர அடிபரப்பளவு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கிய வடிவமைப்பு மற்றும் வழிகாட்டுதல்களின் படி இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக அரசு அதிகாரிகள் அறிவித்த கட்டுமான விதிமுறைகளை ஒப்புக் கொண்டு உதவும் கரங்கள் அமைப்பு அரசுடன் உடன்பாடு ஒன்றையும் செய்துகொண்டது.
உதவும் கரங்கள் அமைப்பை பற்றி
உதவும் கரங்கள் அமைப்பு அரசுசாரா, மதச்சார்பற்ற இலாப நோக்கமில்லா சமுதாய சேவை அமைப்பாக பதிவு பெற்ற அமைப்பாகும். அனாதைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக 1983 ஆம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஒரு தன்னார்வ ஆலோசகராக தனது பணியை துவக்கிய இதன் நிறுவனரான திரு.வித்யாகர், வழிகாட்டு மையத்திலும் பணியாற்றினார். சென்னை என்.எஸ்.கே. நகரில் உள்ள குடிசைப் பகுதிகளில் சமூகப் பணியே தனது தொழிலாக கொண்டு செயல்பட்டார்.
ஒரு நாள் இரவு சினிமா தியேட்டரில் அனாதையாக கைவிடப்பட்ட உருவில் குள்ளமான ஒரு ஆண் குழந்தையை ஒரு ரிக்ஷா தொழிலாளி கொண்டு வந்து வித்யாகரிடம் ஒப்படைத்தார். அப்போது துவங்கிய இவரது சமூக நலப்பணி இதுவரை தொய்வின்றி நடந்து வருகிறது.
20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அமைப்பு மிகப் பெரும் அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. கைவிடப்பட்டோர், புதிதாக பிறந்து பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் , பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் என ஆயிரம் பேருக்கு தற்போது உதவும் கரங்கள் அமைப்பு அடைக்கலமாக திகழ்கிறது. துயறுற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, மறுவாழ்வு, கல்வி வசதி ஆகியவற்றையும் இது அளிக்கிறது.
12 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழுவுடன் செயல்படும் உதவும் கரங்கள் அமைப்பு இந்தியாவில் பதிவு பெற்ற சொஸைட்டி ஆகும். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் சமூகத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகப் பொறுப்பும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்காக உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் ஆவர்.
6 பேர் கொண்ட இயக்குனர்களுடன் செயல்படும் அமெரிக்காவில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பு சர்வதேச அளவில் பதிவு பெற்ற அறக்கட்டளை ஆகும். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மற்றும் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்துள்ள அமெரிக்கர்கள் உள்ளடக்கியதாகும் இந்த இயக்குனர் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு
ரம்யா நாயர்
சாரா கம்யூனிகேஷன்ஸ்
செல்: 9884097898