அனைத்து தகுதி குறைந்த பணியாளர்களுக்கும் குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பஹ்ரைன் அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியர்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் திறமை குறைந்த தொழிலாளர்கள் என்று கூறி சில நிறுவனங்கள் மிகக்குறைந்த ஊதியத்தை வழங்குவதாக புகார்கள் உள்ளன. அதனையடுத்து, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சராசரி செலவுகளை பொருத்து அரபு நாடுகளில் குறைந்தபட்ச ஊதியத்தை இந்தியா நிர்ணயித்து வருகிறது.
இந்திய தூதரக அதிகாரி பாலகிருஷ்ணா செட்டி கூறுகையில், "தொழிலாளர்கள் சுரண்டல், பணவீக்கம் ஆகியவற்றை தடுக்கவும், இந்திய ரூபாய்க்கான மதிப்பை உயர்த்தவும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. பஹ்ரைனில் வீட்டு வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 100 தினார் (ரூ.10 ஆயிரம்) என்று கடந்த அக்டோரில் அமல்படுத்தப்பட்டது.
நிறுவனங்கள் அதிக லாபம் பெறுகின்றபோதிலும் குறைந்த ஊதியமே தருவதாக ஆயிரக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்து தகுதிகுறைந்த தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அயலுறவு அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஊதியத்தை தர மறுத்தால், வேலையாட்களை அனுப்பும் பணியை தூதரகமே ஏற்கும்" என்றார்.
ஏற்கனவே பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும் இந்த குறைந்தபட்ச ஊதியம் பொருந்தும். இந்த பரிந்துரை ஏற்கப்படாவிட்டால் மார்ச் முதல் தேதியில் இருந்து இந்திய தூதரகத்தின் உரிய அனுமதியில்லாமல் இந்திய பணியாளர்கள் பஹ்ரைனுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் மனித உரிமை கழகம் அனைத்து தகுதிகுறைந்த தொழிலாளர்களுக்குமான குறைந்தபட்ச ஊதியத்தை 150 தினாரில் இருந்து 200 தினாராக நியமிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.