மலேசியாவில் பணியாற்றி வரும் இந்திய இசைக் கலைஞர்கள், கோயில் பூசாரிகள், சிற்பிகள் உள்ளிட்டோரின் விசாக்களை புதுப்பித்துத் தர மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
ஒதுக்கப்படும் இந்திய வம்சாவழியினரின் நலன்களில் தங்களுக்கு அக்கறை உள்ளது என்பதைக் காட்டுவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
மேலும், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கோயில் பூசாரிகளின் விசாக்களைப் புதுப்பித்தல் நடவடிக்கைகளில் மலேசியக் குடியுரிமை அதிகாரிகள் வேண்டுமென்றே மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாற்று எழுந்துள்ள நிலையில் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மலேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "மலேசியாவில் தற்போதுள்ள இசைக் கலைஞர்கள், கோயில் பூசாரிகள், சிற்பிகள் ஆகியோருக்கு விசாக்களை புதுப்பித்துத் தரவும், அல்லது புதிதாக விசாக்களை வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அத்துடன், இந்தக் குறிப்பிட்ட பிரிவினரின் பணிக் காலத்தை மட்டும் நீட்டித்துத் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடந்த மலேசிய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய இசைக் கலைஞர்கள், கோயில் பூசாரிகள், சிற்பிகள் உள்ளிட்டோரின் விசாக்களை புதுப்பித்துத் தர வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.