பஹ்ரைனில் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இரண்டு இந்திய தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.
குறைவான ஊதியம், அடிப்படை வசதி இல்லாத நிலை ஆகியவற்றை எதிர்த்து பஹ்ரைனின் ஹபீரா கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரியும் அயல்நாட்டு தொழிலாளர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தொழிலாளர்கள் மிக அதிகம் உள்ள இந்த போராட்ட குழு கடந்த மூன்று நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அந்நாட்டின் வர்த்தக சங்கங்களின் பொது கூட்டமைப்பு பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளது.
"பஹ்ரைன் நாட்டினருக்கான உரிமைகள் இந்திய தொழிலாளர்களுக்கும் உள்ளது. தங்களது கோரிக்கைகளை அரசும், நிறுவன அதிகாரிகளும் ஏற்காதபோது, அவர்களுக்கு வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபடவும் உரிமை உண்டு. அயல்நாட்டினராக இருந்தாலும் சரி, உள்நாட்டினராக இருந்தாலும் சரி இது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை" என்று கூட்டமைப்பின் செயலாளர் ஜப்பார் கலில் கூறினார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜி.பாலகிருஷ்ணன், முகமது ஷபி ஆகிய இரண்டு இந்திய தொழிலாளர்களை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப பஹ்ரைன் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்நாட்டு சட்டப்படி குற்றமாக கருதப்படும்போது தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறித்தியுள்ளதாக தெரிவித்தனர்.
"நிறுவனத்தின் தலைவர் இஷா முகமது அப்துல்ரஹிம் தொழிலாளர்களின் முகாமிற்கு வந்தார். கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பிரதிநிதிகளை அலுவலகத்திற்கு வரச்சொல்லியுள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்றார். எனினும், ஊதிய உயர்வுத்தொகை குறித்து அவர் எதுவும் கூறவில்லை" என்று இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்பு பாலகிருஷ்ணன் கூறினார்.