இந்திய வம்சாவழி மருத்துவருக்கு இம்ரான் யூசப் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த 2006-ஆம் ஆண்டு மார்ச்-ல் குடிபெயர்தல் சட்டம் கடுமையாக்கப்பட்டதால் பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்த மருத்துவர் இம்ரான் யூசப் நிதி பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானார். அதனால் மனமுடைந்த இம்ரான் 2007-ம் ஆண்டு ஜனவரியில் தற்கொலை செய்துகொண்டார்.
இவரது நினைவாக பிரிட்டனின் இந்திய வம்சாவழி மருத்துவ சங்கம் (பி.ஏ.பி.ஐ.ஓ.,) ஒவ்வொரு ஆண்டும் இளம் சர்வதேச மருத்துவ பட்டதாரிகளுக்கு விருது வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் இம்ரான் யூசப் நினைவு விருது இந்திய வம்சாவழி மருத்துவரான சஜயனுக்கு வழங்கப்படுகிறது.
"மருத்துவர் சஜயன் மிகவும் அர்ப்பணிப்பு நோக்கில் பணிபுரியக்கூடியவர்" என்று பி.ஏ.பி.ஐ.ஓ. தலைவர் ரமேஷ் மேத்தா கூறினார்.
மருத்துவர்களுக்கான குடிபெயர்தல் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கும் வகையில் புதிய இணையதளம் துவங்க சஜயன் திட்டமிட்டுள்ளார். "இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச மருத்துவ பட்டதாரிகளுக்கு (ஐ.எம்.ஜி.,) சேவை புரியும் வாய்ப்பு கிடைத்தற்காக பி.ஏ.பி.ஐ.ஓ.,வுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று மருத்துவர் சஜயன் கூறினார்.