சமையல்காரர், வாகன ஓட்டுநர், ஆயாக்கள் போன்ற சாதாரண பணிகளுக்காக அயல்நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் பணி தொடர்பான விதிமுறைகளை சட்ட ரீதியாக உறுதி செய்ய அயல் நாடு வாழ் இந்தியர்களுக்கான அயலுறவு அமைச்சகப் பிரிவு (MOIA) முடிவு செய்துள்ளது!
வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் மிக மோசமாக நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், இதற்குமேல் இப்படிப்பட்ட சாதாரண பணிகளுக்கு இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களிடம் இருந்து ஒரு ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்வதென அயலுறவு அமைச்சகத்தின் அயல்நாடு வாழ் இந்தியர் துறை முடிவு செய்துள்ளது.
அயல்நாடுகளுக்கு வீட்டுப் பணிகளுக்காகச் செல்லும் பெண்களைக் காப்பாற்ற குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கப் போவதாகவும், அதற்காக குடியேற்றச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவரப் போவதாகவும் அயலுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சமையல்காரர்கள், ஓட்டுநர்கள், ஆயாக்கள், தோட்டப் பணி உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு இந்தியர்களை அமர்த்தும் அந்நிறுவனங்கள் அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி அவர்கள் நடத்தப்டுகின்றார்களா என்பதனை கண்காணிக்கும் அதிகாரமும் தூதரகங்களுக்கு வழங்கப்படும்.
பாதிக்கப்படும் இப்படிப்பட்ட பணியாளர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் தூதரகங்களில் உரிய அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
உடல் ரீதியான பணிகளுக்கு அமர்த்தப்படும் இந்தியர்கள் அந்தந்த நாட்டு சட்ட விதிமுறைகளின்படி முறையாக நடத்துவதை உறுதி செய்ய அயலுறவு அமைச்சகத்தின் அயல்நாடு வாழ் இந்தியர் பிரிவு, அரபு குடியரசுடனும், குவைத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதேபோன்றதொரு ஒப்பந்தத்தை மலேசிய அரசுடனும் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளது.
ஆசியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பணியாற்றச் செல்லும் ஊழியர்களின் பணிகளை முறைபடுத்த குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்புடன் இந்திய அயலுறவு அமைச்சகத்தின் அயல்நாடு வாழ் இந்தியர் துறை ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.