வரதட்சணை கொடுமைக்கு தண்டனை அளிக்கும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-வை ஆண்கள், பெண்கள் இருபாலினருக்கும் பொதுவான சட்டமாக்க வேண்டும் என்று அயல்நாடுவாழ் இந்திய கணவன்மார்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
'வரதட்சணை கொடுமை, வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இச்சட்டம் தற்போது கணவன்மார்களையும், அவரது குடும்பத்தினரை பலிவாங்கும் ஆயுதமாக மனைவிமார்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது' என்று இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்க்ள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதேபோல், உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட இந்தியர்களை கண்டறியவும், அவர்களுக்கு உதவவும் பிரத்யேக இணையதளத்தையும் துவக்கியுள்ளனர். அப்பாவிகள் பாதிக்கப்படவும் இந்த சட்டமே முக்கிய காரணமாக இருப்பதால், '498ஏ.ஓஆர்ஜி' என்று அந்த இணையதளத்திற்கு பெயர் சூட்டியுள்ளனர்.
இந்திய மனைவிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிக்கும் மனைவிகளும் இந்த சட்டத்தின்கீழ் புகார் செய்வதால், அப்பாவி கணவன்களை எந்த விசாரணையுமின்றி குடும்பத்துடன் போலீசார் சிறைக்கு அழைத்து சென்றுவிடுகின்றனர். இவர்களுக்கு ஜாமின்கூட வழங்கப்படுவிதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.
இதுபோன்ற சம்பவத்திற்கு பிறகு அவர்கள் இணைந்து வாழ்வதற்கு சாத்தியமில்லாமல் போவதாகவும், சட்டம் தவறாக பயன்படுத்தப்படவதை தடுக்க முறையான விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
விதிமுறைகள் அவசியம்:
இந்தியாவிற்கு சென்று 498ஏ சட்டத்தின்கீழ் புகார் கொடுக்கும் பெண்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் புகார் கொடுத்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.
புகாருக்கு உள்ளானவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, அந்நாடு சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட அயல்நாடுவாழ் இந்தியரின் விபரத்தை இந்திய தூதரகத்தின் வாயிலாக, அந்நாட்டின் சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதன்பேரில், முதலில் அந்நாட்டு நீதிமன்றங்கள்தான் விசாரணை நடத்த வேண்டும். அவற்றில் உரிய நீதி கிடைக்காத நிலையில், மேல்முறையீடு செய்யப்படும்போது மட்டுமே இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான செலவையும் அந்நாடே ஏற்க வேண்டும். இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
பாதிக்கப்படும் மனைவிமார்கள் கணவன்மார்கள், அவரது குடும்பத்தினர் மீது 498ஏ பிரிவின்கீழ் புகார் கொடுப்பதைப்போல், மனைவிமார்களால் பாதிக்கப்படும் கணவன்மார்களும் இந்த சட்டத்தின்கீழ் புகார் கொடுக்க உரிய திருத்தத்தை கொண்டுவர வேண்டும். இவ்வாறு இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள கணவன்மார்கள் இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
உலகின் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகளையும், தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.