மேல்நிலைப் பள்ளிப்படிப்பு முடிக்காத 30 வயதிற்குக் குறைவான இந்தியப் பெண்கள் அயல்நாடுகளில் பணியாற்றுவதை இந்தியா கட்டுப்படுத்தி வருகிறது.
"அயல்நாடுகளில் தாங்கள் பணியாற்றும் இடங்களிலோ அல்லது வேறு இடங்களிலோ இந்தியப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது " என்று அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் இரவி தெரிவித்துள்ளார்.
எல்லா பணி ஒப்பந்தங்களும் இடைத்தரகர் தலையீடு இல்லாமல் பணி தருபவருக்கும் பணி பெறுபவருக்கும் இடையில் நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, அவசர காலங்களில் தங்களுக்கு வேண்டியவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் செல்பேசிகளை பணியமர்த்துவர்கள் தரவேண்டும் என்பது உள்ளிட்ட
கட்டுப்பாடுகளை புதிய விதிகள் உள்ளடக்கியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்பு வீட்டுவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டும் இந்த வயது வரைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடிக்காத எல்லாப் பெண்களுக்கும் வயது வரன் முறை பொருந்தும்படி சோதனை விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்கள் இம்மாத தொடக்கம் முதல் செயலுக்கு வரும்.
"வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் துதரகங்களின் அதிகாரிகளுடன் அயலுறவுஅமைச்சகம் நடத்திய விவாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் பணி ஒப்பந்தங்கள இனி இந்திய அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் அழகுநிலையங்களில் பணியாற்றுவதற்குச் செல்லும் பெண்கள், வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் ஆகியோர் தாங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், ஏஜண்டுகளால் மோசடி செய்யப்பட்டதாகவும் வந்த ஏராளமான புகார்களையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் தங்கள் குறைகளை நேரடியாக அமைச்சகத்திடமோ அதிகாரிகளிடமோ தெரிவிக்கும் வகையில் உதவித் தொலைபேசி (ஹெல்ப் லைன்) அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். ஏற்கெனவே சில நாடுகளில் இந்த முறை நடைமுறையில் உள்ளது" என்றும் அமைச்சர் வயலார் இரவி கூறியுள்ளார்.