பிரிட்டனின் ஹாரோ பகுதியில் அரசு நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள முதல் ஹிந்துப் பள்ளி இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படத் துவங்க உள்ளது.
கிருஷ்ண ஆவந்தி துவக்கப் பள்ளி என்று அழைக்கப்படும் இப்பள்ளியில் முதலில் 30 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட உள்ளனர். இதையடுத்து 2016 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 30 மாணவர்கள் வீதம் அதிகரிக்கப்பட உள்ளது.
பிரிட்டனிலேயே ஹாரோவில் தான் அதிகளவிலான ஹிந்துக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியின் மொத்த மக்கள் தொகையில் 19.6 விழுக்காடு, அதாவது 40,000 க்கும் மேற்பட்டோர் ஹிந்துக்கள் ஆவர்.
ஹிந்துப் பள்ளியின் தலைமை ஆசிரியை நைனா பர்மார் கூறுகையில், "அமைதியான, மகிழ்ச்சியான, ஆக்கபூர்வமான கற்றலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். வேதக் கற்பித்தலுடன் இணைந்த வாழ்க்கை முறை மூலம் மாணவர்களின் திறனை மேம்படுத்த விரும்புகிறோம்" என்றார்.
இப்பள்ளிக்கு அரசு நிதியுதவியைப் பெறும் முயற்சிகளை மேற்கொண்ட ஐ அறக்கட்டளையின் இயக்குநர் நிதிஷ் கோர் கூறுகையில், "ஹிந்து மதப் பெற்றோர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்புகின்றனர். பிரிட்டனில் பல்வேறு மதங்களுக்கும் அரசு உதவியளிக்கும் பள்ளிகள் உள்ளன. அந்த வகையில் ஹிந்துக்கள் தங்கள் உரிமையைப் பெற்றுள்ளனர்" என்றார்.
கிருஷ்ண ஆவந்தி துவக்கப் பள்ளி இஷ்கான் அமைப்புடன் இணைந்து செயல்படும்.