அயல்நாட்டினர் அமெரிக்கா சென்று பணியாற்றிட அந்நாடு வழங்கும் ஹெச்1 பி விசா எண்ணிக்கை 65 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது!
ஹெச்1 பி விசா எண்ணிக்கையை உயர்த்துவதற்கும், அமெரிக்காவில் நீண்ட காலமாக பணியாற்றிவரும் அயல்நாட்டவர்களை அந்நாட்டின் சட்டப்பூர்வ குடிமக்களாக அங்கீகரிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவை அமெரிக்க மக்களவை (செனட்) நிறைவேற்றியுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றிடும் வாய்ப்பு உள்ள திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு, குறிப்பாக மென்பொருள் தொழில்நுட்ப நெறிஞர்களுக்கு விசா எண்ணிக்கை உயர்வு ஒரு வரப்பிரசாதமாகும்.
65 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 15 ஆயிரமாக விசா எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மட்டுமின்றி, அதனை ஒவ்வொரு ஆண்டும் 20 விழுக்காடு அளவிற்கு உயர்த்துவதற்கும் செனட் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாஃப்ட், இன்டெல் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் ஹெச்1 பி விசா எண்ணிக்கையை உயர்த்தி அந்நியத் திறனை உள்ளே கொண்டு வர அனுமதிக்கவில்லையெனில் தாங்கள் தங்களுடைய நிறுவனத்தின் பணிகளை அயல்நாட்டிற்கு கொண்டு செல்ல நேரிடும் என்கின்ற மிரட்டலையடுத்துதான் இந்த விசா எண்ணிக்கை உயர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக வசித்து வரும் 10 முதல் 12 மில்லியன் அயல்நாட்டவருக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் இந்த சட்ட முன்வரைவு அமெரிக்க செனட்டில் 62க்கு 32 என்ற வாக்கு கணக்கில் நிறைவேறியுள்ளது. ஆளும் குடியரசுக் கட்சி இதனை எதிர்த்து ஆயினும் அதன் பல உறுப்பினர்கள் சட்ட முன்வரைவை ஆதரித்துள்ளனர்.