துபாயில் குறைந்தபட்ச ஊதியம் கோரிப் போராடிய சுமார் 4,000 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்படப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என்று பலமுறை புகார்களை அளித்துள்ளனர்.
துபாயில் உள்ள ஜெபல் அலி தொழிற் பூங்காவில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு கடந்த சில நாட்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்கள் தங்களின் போராட்டங்களைக் கைவிட வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.
இதை மீறிப் போராட்டம் நடத்திய 4,000 இந்தியத் தொழிலாளர்களைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களின் விசாக்களைரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவீர் சிறையில் உள்ள தொழிலாளர்களை இந்திய தொழிலாளர்நல அதிகாரி முபாரக் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
துபாய் அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுவரை யாருடைய விசாவும் ரத்து செய்யப்படவில்லை என்று முபாரக் தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பாக அரபு நாடுகளுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.