துபாயில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஓட்டல் பால்கனி இடிந்து விழுந்ததில் இந்தியத் தொழிலாளர்கள் 6 பேர் உடல் நசுங்கிப் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த அஜ்மான் குடியரசில் கார்னிச் சாலையில் உள்ள லகுனா பீச் ஓட்டலின் தரைத் தளத்தில் உள்ள கான்கிரீட் பால்கனியில் ஏற்பட்ட உடைப்பை அடைப்பதற்காக தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.
இந்த விபத்து நேற்று அதிகாலை ஏற்பட்டிருந்தாலும், முதல் உடல் 16 மணி நேரத்திற்குப் பிறகே மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரமாக இருந்த கான்கிரீட் இறுகிவிட்டதால் அதை சிறிது சிறிதாக உடைத்து உடல்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
பலியான தொழிலாளர்கள் அனைவரும் லகுனா பீச் ஓட்டலைக் கட்டிவரும் செடிகோ ஜெனரல் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் என்று கல்ஃப் நியூஸ் இதழிலில் இன்று வெளியாகியுள்ள செய்தி கூறுகிறது.
இவ்விபத்து தொடர்பாக பணியிடப் பொறியாளர், ஆலோசகர் ஒருவர் ஆகியோர் உட்பட 4 பேரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.