தங்குமிட அனுமதி, விசா உள்ளிட்ட ஆவணங்கள் காலாவதியான பிறகும் வெளியேறாமல் தங்கியுள்ள சுமார் 3,500 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற ஓமன் அரசு முடிவு செய்துள்ளது.
ஓமனில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாக 3,497 இந்தியர்களின் பெயர் விவரங்களை பத்திரிகை ஒன்றில் வெளியிட்டுள்ள அந்நாட்டு மனிதவள அமைச்சகம், நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு இந்தியர்கள் ஒத்துழைக்க வேண்டும என்றும், இல்லாவிடில் அபராதம் உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியத் தூதரகம் விடுத்துள்ள வேண்டுகோளிற்கு இணங்க, சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்கள் வழக்கமான சோதனைகளைத் தவிர எந்தவிதமான அபராதத்தையும் கட்டாமல் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்க ஓமன் அரசு ஒப்புக்கொண்டது.
ஓமனிற்கான இந்தியத் தூதர் அனில் வத்வா கூறுகையில், "பணி விசாவுடன் வந்த 5,541 இந்தியர்களின் பெயர்கள், விசிட்டர்ஸ் விசாவுடன் வந்த 2,603 இந்தியர்களின் பெயர்கள் ஆகிய இரண்டு பட்டியல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற அனுமதி கேட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ஆவணங்கள் காலாவதியான பிறகும் ஓமனில் தங்கியிருக்கும் இந்தியர்களும், பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற தூதரகத்திற்கும், அமைச்சகத்திற்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியத் தூதரகம் வலியிறுத்தியுள்ளது.