மத்திய அரசு அறிவித்தபடி, அயல்நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
அயல்நாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 100 பஹ்ரைன் தினார் (ரூ.10,481) வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கடந்த அக்டோபரில் வலியுறுத்தியது. இதை பஹ்ரைன் அரசும் சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொண்டது. இதனால், 2 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த மாதம் இந்திய தூதரக அதிகாரி பாலகிருஷ்ண செட்டி கூறுகையில், "புதிய ஒப்பந்தத்தின்படி குறைவான தகுதியுடைய தொழிலாளர்கள் தற்போதைய வாழ்க்கை செலவீனங்களை சமாளிக்கும் வகையில், 100 பஹ்ரைன் தினார் ஊதியம் பெறுவார்கள்" என்றார்.
மத்திய அரசு எடுத்த முடிவையே இவரும் கூறியிருந்தாலும், பஹ்ரைனில் போராட்டங்கள் நடக்குமளவுக்கு இவரது பேச்சு தீவிரமாக இருந்தது. இவரது அறிவிப்புக்கு அந்நாட்டு ஒப்பந்ததாரர்களும், சில அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து தகுதி குறைந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தப் போவதாகவும் சில ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாலகிருஷ்ண செட்டி தனது பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். அதிகரிக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இந்திய தொழிலாளர்களைக் காப்பாற்ற இந்திய அரசு எடுத்த முடிவைத்தான் தான் நிறைவேற்ற முயன்றதாக அவர் கூறினார் என்று 'கல்ப் நியூஸ்' தெரிவித்துள்ளது.
இந்திய அரசு அறிவித்தபடி பஹ்ரைனில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய ஒப்பந்தம் இன்று நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில், அதை அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமைக்கு தள்ளிப்போட்டுள்ளது.