2006-07 நிதியாண்டில் நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த நிதியாண்டை விட 7.5 முதல் 8 விழுக்காடு வரை உயரும் என்று இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) கூறியுள்ளது!
2006-07 நிதியாண்டிற்கான ஆண்டு கொள்கை அறிக்கையை மைய வங்கி இன்று வெளியிட்டது. மைய வங்கியின் ஆளுநர் ஒய். வேணுகோபால் ரெட்டி இதனை வெளியிட்டார்.
வங்கிகளின் வட்டி விகிதத்திலோ அல்லது ரொக்க இருப்பு விகிதாச்சாரத்திலோ (Cash Reserve Ratio) அல்லது ஆர்.பி.ஐ. வெளியிட்ட பத்திரங்களை மீண்டும் வாங்குதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரத்திலோ (Repo Rate) எந்த மாற்றமும் இல்லை என்று ஆளுநர் ரெட்டி அறிவித்தார்.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் விவசாய உற்பத்தி 2.3 விழுக்காடாக இருந்தது என்றும், அதற்கு முந்தைய நிதியாண்டில் (2004-05) 0.7 விழுக்காடாக இருந்தது என்றும் கூறியுள்ள மைய வங்கிக் கொள்கை அறிக்கை 2004-05 நிதியாண்டில் 7.4 விழுக்காடாக இருந்த தொழிலக உற்பத்தி வளர்ச்சி 2005-06 நிதியாண்டில் 8 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.
இந்த நிதியாண்டிலும் ரூபாயின் பண வீக்க விகிதம் 5 முதல் 5.5 விழுக்காட்டிற்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று மைய வங்கி கூறியுள்ளது.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடன் மற்றும் நிதிக் கொள்கையை மைய வங்கி கடைபிடிக்கும் என்று வங்கிகள், நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் இடையே பேசிய ஒய்.வி. ரெட்டி கூறினார்.