குடியேற்றக் கொள்கை மாறுதலால் வெளியேறிய இந்தியப் பணியாளர்களை மீண்டும் நாடு திரும்ப அனுமதிப்பது என்று பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
பிரிட்டனில் குடியேறி, அங்கு உயர் பதவிகளில் பணி புரிந்து வரும் வெளிநாட்டினர் தொடர்பான தனது கொள்கைகளில் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிட்டன் அரசு சில மாற்றங்களை கொண்டு வந்தது.
இதன்படி மருத்துவம் உள்ளிட்ட உயர் தகுதி வாய்ந்த பணிகளில் பிரிட்டன் அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தவிர, பிற நாட்டினர் பணிபுரிவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இது அங்குள்ள வெளிநாட்டு பணியாளர்களை குறிப்பாக இந்தியர்களை கடுமையாக பாதித்தது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் பிரிட்டனில் இருந்து வெளியேறினர்.
இதற்கிடையே அரசின் முடிவுக்கு எதிராக பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசின் குடியேற்றக் கொள்கை மாற்றங்களை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
இதையடுத்து தனது நிலையை தளர்த்திக் கொள்ள பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், குடியேற்றக் கொள்கை முடிவால் பிரிட்டனில் இருந்து வெளியேறிய பணியாளர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து 'உயர் தகுதியுடைய புலம் பெயர்ந்தோர் திட்ட' அமைப்பின் (ஹெச்.எஸ்.எம்.பி.) நிர்வாக இயக்குனர் அமீத் கபாடியா கருத்து தெரிவிக்கையில், அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தங்கள் அமைப்பிற்கு தற்போது சட்டரீதியாக வெற்றி கிடைத்துள்ளது என்றார்.
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மீண்டும் பிரிட்டனில் குடியேறுவதற்கு தேவையான உதவிகளை தங்கள் அமைப்பு செய்து தரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.