ஆஸ்ட்ரேலியாவில் படித்து வரும் 21 வயது இந்திய மாணவர் மீது நிறவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
டேவிட் என்று அழைக்கப்படும் இந்த மாணவர் ஆஸ்ட்ரேலியாவில் கடந்த இரண்டரை மாதங்களாக வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று ரெயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 4 பேர் இவரை வழிமறித்து சிகரெட் கேட்டுள்ளனர்.
அப்போது திடீரென நால்வரும் டேவிட்டை அடித்து உதைத்து வன்முறையில் ஈடுபட்டனர். பிறகு அவரது பின் மண்டையில் பாட்டிலால் அடித்தனர். இதனால் டேவிட் மயக்கமடைந்ததாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை ஒன்று கூறியுள்ளது.
சாலையின் மறு முனையில் சென்று கொண்டிருந்த மக்களிடம் உதவி கோரி டேவிட் கதறியுள்ளார். ஆனால் ஒருவரும் மனமிரங்கவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டேவிட்டிற்கு மண்டையில் தையல் போடப்பட்டுள்ளது. முக வீக்கம் ஏற்பட்டு மூக்கிலும் பயங்கரக் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்திய மாணவரும் பகுதி நேர கார் ஓட்டுனருமான ஜல்விந்தர் சிங் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இன்னொரு இந்திய மாணவரும் தாக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவில் தொடர்ந்து இதுபோன்று இந்தியர்கள் நிறவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.