அமெரிக்காவின் மிஸிஸிப்பியில் உள்ள சிக்னல் இன்டர்நேஷனல் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 100 இந்தியர்கள் தாங்கள் அடிமைகளைப் போல் நடத்தப்பட்டதாகக் கூறி வேலையில் இருந்து விலகி உள்ளனர்.
இதுகுறித்து நியூ ஆர்லன்ஸில் உள்ள தொழிலாளர் உரிமை பாதுகாப்பு குழு பொறுப்பாளர் சகெத் சோனி கூறுகையில், "இந்திய தொழிலாளர்கள் உண்மையாக வேலை செய்தும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களால் அதிக கொடுமைகள் இழைக்கப்படுக்கின்றன. தற்போது இந்த விவகாரத்தை அமெரிக்காவின் சம வேலைவாய்ப்பு ஆணையம் ஆய்வு செய்து வருகிறது" என்றார்.
"சிக்னல் இன்டர்நேஷனல் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் அளிக்கப்பட்ட தங்கும் விடுதியில் 'கூண்டில் அடைக்கப்பட்ட பன்றிகள்' போல இருந்தோம். ஒரே அறையில் 25 பேர் தங்கவேண்டியிருந்தது' என்று அங்கு வேலை செய்த இந்திய தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள இந்திய அரசு அமெரிக்காவை வலியுறுத்த வேண்டும். இந்த நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு செய்தவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் தற்சமயம், சட்ட ரீதியான அனைத்து வழிமுறைகளையும் ஆய்வு செய்து வருகிறோம். அயல்நாடுவாழ் இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியிடம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நிலைமையை எடுத்துக்கூறினர். அதற்கு 'இந்த விவகாரத்தில் இந்திய அரசின் உச்சகட்ட முக்கியத்துவம் அளிக்கப்படும்' என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்" என்றார் சோனி.
இதற்கிடையில், 'இந்திய தொழிலாளர்கள் மீதான கொடுமைகளை முக்கிய விவகாரமாக கருதுகிறோம்' என்று அமெரிக்காவுக்கான இந்தியா தூதரகம் கூறியுள்ளது.