அமெரிக்காவிற்கு சென்று பணியாற்றும் இந்திய ஊழியர்கள் பலர் தேவையற்ற நெருக்கடிகளுக்கு உள்ளாவது பற்றிய விவகாரம் இன்று மக்களவையில் எழுப்பப்பட்டது.
இது குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி. கருணாகரன் கேள்வி எழுப்பினார். பணித் தேர்வு முகவர்கள் மூலம் அமெரிக்கா செல்லும் ஊழியர்கள் பலர் சுரண்டலுக்குட்படுவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அரசுடன் இந்திய அரசு இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆட்களை முகவர்கள் விளம்பரங்கள் மூலம் தேர்வு செய்கின்றனர். அவர்கள் 10 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும் ஹெச்.2-பி விசா மூலம் அனுப்பப்படுகின்றனர். 10 மாதங்களுக்குப் பிறகு விசா ரத்து செய்யப்படும். இது ஒரு மோசமான நிலைமை என்றார் கருணாகரன்.
இதற்கு அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில் அரசு இதற்கு என்ன செய்ய முடியும்? அதிகபட்சமாக பணித் தேர்வு முகவர்களை தடுக்க முடியும் அவ்வளவுதான் என்றார்.
அவைத் தலைவரின் இந்த கருத்தை ஏற்றுக்கோண்ட கருணாகரன், அமெரிக்காவின் இந்திய தூதர் டேவிட் மல்ஃபோர்ட் கவனத்திற்கு இந்த விவகாரத்தை இந்திய அரசு கொண்டு செல்லவேன்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் பணியாள் தேர்வு முகவர்கள் எந்த வித மோசடியிலும் ஈடுபடுவதை கண்டிப்பாக தடுத்து நிறுத்தவேண்டும் என்றார்.