Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளவரசன் மரணம்: கொளத்தூர் மணி பேட்டி

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2013 (17:50 IST)
FILE
இளவரசன் மரணம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி நமது வெப்துனியா இணைய தளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டி.



இளவரசன் மரணம் குறித்து தங்களது கருத்து?

ஜாதி மறுப்புத் திருமணங்களில் கூட அதுவும் மணமகன் இந்துமத சமூகப்படிக்கட்டுகளில் கீழே இருப்பாரேயானால் அதைத்தடுப்பது என்பது மட்டுமல்ல. அவர்களைக் கொல்லுவது என்பது கூட பல இடங்களில் நடந்து வருகின்றது. தர்மபுரியில் நடந்த ஜாதிமறுப்புத் திருமணத்தைக் காரணம் காட்டி ஜாதியத்தைக் கையில் பிடித்துக் கொண்டு அரசியலில் முன்னுக்கு வரலாம் என்று நினைத்த சுயநல சக்திகளின் ஏற்பாட்டில் பேரழிவு ஏற்பட்டது. 300க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த நிலையில் நீதிமன்றத்தில் அந்த ஆட்கொணர்வு மனு போடப்படுகின்றது. அப்போது அந்தப்பெண் திவ்யா நீதிமன்றத்தில் வந்து நேர் நிற்கிறார். அதோடு முடிந்திருக்க வேண்டிய வழக்கு வேண்டுமென்றே இழுத்துக் கொண்டுவந்து அந்தப்பெண்ணை எப்படியாவது அம்மாவோடு அனுப்பிவிட வேண்டும் என்ற முயற்சியில் வெளிப்பாடாகத்தான் இதைப்பார்க்க முடிகிறது.

ஜூலை 1 ஆம் தேதி கூட நான் என் அம்மாவை சமாதானம் செய்ய முயற்சிப்பேன் என்று சொன்ன பெண் ஜூலை 3 ஆம் தேதி இப்படி சொல்லப்போய் ஒரு வேளை அதுதான் இளவரசன் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். இல்லை அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். எப்படியிருந்தாலும் மனம் ஒத்து வாழவிரும்பிய இளம்தம்பதிகளை அநியாயமாய் நாம் இழந்திருக்கிறோம். இளவரசன் சாவில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஜாதியம் வென்றுவிட்டது. காதல் தோற்றுவிட்டதோ என்று என்னத் தோன்றுகிறது. இந்த வேளையில் ஜனநாயக உணர்வுள்ளவர்கள், முற்போக்கு சக்திகள் இப்படி மனம் விரும்பி செய்கிற மனங்களைக்கூட ஜாதிய உணர்வோடு தடுப்பவர்களுக்கு எதிராக நாம் மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டும்.

திடீரென நேற்று முன்தினம் (ஜூலை 3 ஆம் தேதி) திவ்யா இனி இளவரசனுடன் வாழமாட்டேன் என்று கூறியது குறித்து உங்கள் கருத்து?

FILE
திவ்யாவின் வாயிலிருந்து வந்த வாக்குமூலமே தவிர மனதிலிருந்து சொன்னதாகத் தெரியவில்லை. இரண்டு நாளைக்கு முன்புகூட வேறு மாதிரி சொன்னவர், தன் அம்மாவையும் சரி செய்வேன் என்று சொன்னவர் 3 ஆம் தேதி இனி நான் வரவே மாட்டேன் என்று சொல்லுகிறார். அன்றைய தினம் திவ்யாவோ அவரது அம்மாவோ நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவையே இல்லை. ஆனால் ஒரு செயற்கையான செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்தி அவரை அவ்வாறு பேச வைத்ததாகவே தெரிகிறது.

இதில் ஒரு செய்தியைக் குறிப்பிட வேண்டும். இளவரசன், திவ்யா திருமணம் 10.10.2012 அன்று நடக்கிறது. 07.11.2012 அன்றுதான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. திவ்யாவின் தந்தை இறந்த வழக்கில் இளவரசன் ஒரு குற்றவாளியாக தேவையில்லாமல் சேர்க்கப்படுகிறார். இதனால் அவர் ஏற்கனவே தேர்வாகியிருந்த போலீஸ் வேலைக்கு அவரால் போக முடியவில்லை.

ஒரு மாதம் கழித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளவரசனை சேர்த்திருக்கும் காவல்துறை, தற்போது இளவரசன் செய்து கொண்டது தற்கொலையாகவே இருந்தாலும், 1ஆம் தேதி தாயையும் சரி செய்வேன் என்று சொன்ன திவ்யா, 3 ஆம் தேதி இனி வாழமாட்டேன் என்று கூறி இருக்கிறார். ஆக இரண்டு நாளில் முடிவை மாற்றிக்கொள்ள காரணம் என்ன? திவ்யா இவ்வாறு பேசிய மறுநாளே இளவரசன் இறந்திருக்கிறார். இளவரசன் இறந்த வழக்கில் திவ்யா, திவ்யாவின் அம்மா, பாமகவினர் அக்கட்சியின் வழக்கறிஞர்கள் சேர்க்கப்படுவார்களா? இளவரசன் மீது அன்று காவல்துறை வழக்குப் போட்டது நியாயம் என்றால் இன்று இவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்.

இளவரசன் மரணம் மக்களுக்கு உணர்த்தும் செய்தி?

FILE
நடந்தது தற்கொலை என்கிறபட்சத்தில் இளைஞர்கள் போராடி வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமே தவிர, இப்படி தங்களது எண்ணம் ஈடேராதபோது அல்லது சற்று பின்னடைவு ஏற்படும்போது தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளக்கூடாது. கொலையாக இருக்குமேயானால் அவர்கள் உரிய நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொருப்பும், அவர்களில் யாரொருவர் கொலைக்கு ஆளானாலும் அதற்கான சிறப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் டாங்கே சொல்லியிருக்கிறார்கள் அதை தமிழ்நாட்டில் முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இது போன்ற கொடுமைகள் இனி நடக்காமல் இருக்க அரசும், நீதித்துறையும் நிர்வாகமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் என்ன செய்ய வேண்டும்?

அரசு அதிகாரிகளாக இருந்தாலும், காவல் துறையினராக இருந்தாலும் அதில் இருப்பவர்கள் தங்களைப் பொது நல ஊழியராகக் கருதாமல், ஜாதியவாதியாக நினைத்துக் கொண்டிருக்கிற போக்கு சமூகத்தில் நிலவுகிறது. அது அரசு அலுவலகங்களில் மதச்சடங்கு செய்வதில் தொடங்கி ஜாதியாகத்தான் இயங்குகிறார்கள். இதை அரசு ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஜாதி, மத உணர்வு எந்த விதத்திலும் அரசு ஊழியர்களிடம் வெளிப்படாத வண்ணம் உறுதியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சமூக இயக்கங்களைப் பொருத்தவரை ஜாதிமறுப்புத் திரும்ணங்கள் நடக்கிறபோது அவர்களைப் பாதுகாப்பது என்பது ஒருபுறமிருந்தாலும், மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட இயல்பான காதல் என்பது வெறுக்கத்தக்கது அல்ல என்பதையும், ஜாதி மதம் என்பது செயற்கையாக மனிதகுலத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்ட ஒன்று என்பதையும், இவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு மனிதர்களாக வாழ வேண்டும் என்பதையும், மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, மொழியின் பெயராலோ, ஏன் நாட்டின் பெயராலோ கூட பிரிந்து கிடக்காமல், நான் முதலில் மனிதன் அதற்குப் பின்னால்தான் எதுவும் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க சமூக இயக்கங்கள் முயற்சிக்க வேண்டும். பாடத்திட்டங்களும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ராமதாஸை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேலையில்லை.. அமைச்சர் சேகர்பாபு..!

டெல்லி பிவிஆர் தியேட்டர் அருகில் திடீரென வெடித்த மர்ம பொருள்.. தீவிரவாதிகள் சதியா?

பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளாக குழந்தையை டிராயரில் மறைத்து வைத்திருந்த தாய் - எதற்காக?

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ: கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

Show comments