இளவரசன் மரணம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? ஜாதிய சமூகத்தில், ஜாதியம் இருக்கும் வரை இப்படிப்பட்ட மரணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஜாதி இல்லாத சமூகம் படைப்பதே, இளவரசன்களை நாம் இழக்காமல் இருக்கிற நிலைக்கு வழிவகுக்கும். ஜாதிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு போராட வேண்டும். ஜாதியத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசுகள் முறையாக அமல்படுத்த வேண்டும். ஒரு வன்கொடுமை நிகழ்ந்தால் பி.சி.ஆர் புகாரை வாங்க மறுக்கும் சூழல்தான் காவல்துறையில் இருக்கிறது. எத்தனையோ தீர்ப்புகளை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் சொன்ன பிறகும் கூட சட்டம் மதிக்கப்படாமல் இருக்கிறது. சட்டம் நேர்மையாக அமல்படுத்தப்பட வேண்டும். ஜாதியத்திற்கு எதிரான மனநிலையை மக்களிடம் உண்டாக்க வேண்டும். இப்படிப்பட்ட ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். ஜாதி மறுப்பு மணம் புரிந்தோருக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். ஜாதியை வைத்து அரசியல் செய்கிற சக்திகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.
குறிப்பாக நாடகக் காதல் என்று தேவையில்லாமல் "மனித சமூகத்திற்கு எதிரான ஒரு செயல்பாட்டை முன்னெடுத்த ராமதாஸ் போன்றவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும ்". அவர்கள் இப்படிப்பட்ட அரசியலை முன்னெடுப்பதன் மூலமாக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதை ஜாதி அமைப்புகளுக்கு உணரச் செய்ய வேண்டும். ஜாதியற்ற சமூகம் படைக்க வேண்டும் என்பதே இளவரசன் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் செய்தி.
இது போன்ற வன்கொடுமைகள் மேலும் தொடராமல் தடுக்க அரசு, நிர்வாகம், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்திய சமூகத்தில், குறிப்பாக தமிழ் சமூகத்தில் அனைத்தையும் தீர்மானிப்பது ஜாதியாகதான் இருக்கிறது. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் ஜாதிதான். ஒருவன் பிறக்கும் போது அவன் எந்த ஜாதியில் பிறக்கிறானோ, அந்த ஜாதிய பொருளாதாரம் தான் அவனுடைய பொருளாதார நிலையாக இருக்கிறது. ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகம் அல்லது தலித்தாக பிறந்தான் என்று சொன்னால் அவன் 90 சதவீதம் ஒரு ஏழையாகத்தான் இருக்கிறான். ஒருவன் ஆதிக்க ஜாதி என்று சொல்லப்படுகிற உயர் வகுப்பில் பிறக்கிறான் என்றால் அவன் வர்க்க ரீதியாகவே ஒரு வசதி படைத்தவனாகப் பிறக்கிறான். அந்த பிறப்புதான் அவன் கல்வியையும் தீர்மானிக்கின்றது. ஒருவன் உண்ணும் உணவு கூட ஜாதிதான் தீர்மானிக்கின்றது. முக்கியமாக திருமணத்தை ஜாதிதான் தீர்மானிக்கின்றது. இளவரசன் பிரச்சனையே கூட அதுதான். ஒரு மனிதன் இறந்த பிறகும் கூட சுடுக்காட்டில் புதைக்க அல்லது எரிக்க எந்த சுடுகாட்டில் புதைக்க வேண்டும் என்கிற பிரச்சனை வருகிறது. தலித் சுடுகாட்டிலா அல்லது தலித் அல்லாதார் சுடுகாட்டிலா என்ற பிரச்சனை வருகிறது. பொதுவான அரசியல் கட்சிகள் கூட ஜாதியை மையப்படுத்திதான் செயல்படுகிறார்கள். ஒரு தொகுதியில் எந்த ஜாதிக்காரரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று பார்த்துதான் வேட்பாளரை நிறுத்துகிறார்கள். இவையெல்லாம் ஜாதியத்தை நிலை நிறுத்துவதற்கு, உயிரோடு வைத்திருப்பதற்கு காரணமாக அமைகின்றது. ஆகவே ஜாதியற்ற சமூகம் படைப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டியிருக்கிற நடைமுறையை மிகத் தெளிவாக நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவந்திருக்கின்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜாதிக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் குழந்தைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கிற தம்பதிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகள் எடுத்தால்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஜாதியை ஒழிக்க முடியும்.