மகாராஷ்டிராவில் காதலனை ப்ரேக் அப் செய்த பெண்ணை காதலன் கடத்தி சென்று நண்பர்களுடன் கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் பிவாண்டி நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்து வந்துள்ளது. அதேசமயம் இளம்பெண் வேறு ஒரு நபருடன் பழகத் தொடங்கி அது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் தனது முதல் காதலரை அந்த பெண் ப்ரேக் அப் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் காதலன் இளம்பெண்ணை பழிவாங்க துடித்துள்ளார். இதற்காக இளம்பெண்ணின் தம்பியை கடத்திய அவர் போன் போட்டு தான் குறிப்பிடும் இடத்திற்கு வர சொல்லி மிரட்டியுள்ளார். இளம்பெண் அங்கு சென்ற நிலையில் முன்னாள் காதலனும், அவரது நண்பர்களும் சேர்ந்து இளம்பெண்ணையும், அவரது தம்பியையும் மூர்க்கமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் இளம்பெண்ணை கடத்தி சென்று முன்னாள் காதலன் வன்கொடுமை செய்ததோடு, அவரது நண்பர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய இளம்பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் முன்னாள் காதலனையும், அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K