Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
, திங்கள், 27 ஜூலை 2015 (10:20 IST)
பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் உடையில் வந்த தீவிரவாதிகள் காவல் நிலையம் மற்றும் பேருந்து மீது  தாக்குதல் நடத்தினர்  இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ராணுவ சீருடை அணிந்தபடி கார் ஒன்றில் வந்த தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பஞ்சாப் நோக்கி வந்த ஒரு பயணிகள் பேருந்தை அமிர்தசரஸ்-பதான்கோட் நெடுஞ்சாலையில் வழிமறித்தனர்.
 
பின்னர், துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக அந்த பேருந்தை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அருகாமையில் உள்ள டினா நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட தீவிரவாதிகள், அங்கிருந்த காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.
 
இந்த தாக்குதலில் டினா நகர் காவல்நிலைய காவல்துறை துணை ஆய்வாள்ர் முக்தியார் சிங் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
 
இது குறித்து தகவல் வெளியானதும் அந்தப் குதியில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டுவரும் காவல்துறையினருக்கு உதவியாக கூடுதல் படைகளை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். 
 
இதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான வீரர்கள் டினா நகர் பகுதியை நோக்கி விரைந்துள்ளனர். தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், மேற்கண்ட இந்த இண்டு தாக்குதல்களிலும் பொதுமக்களில் 7 பேர், காவல்துறையினர் தரப்பில் 2 பேர் என மொத்தம் 9 பேர் பலியானதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதற்கிடையே, பஞ்சாப் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டடு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு நிலவிவரும் சூழ்நிலை தொடர்பாக தனக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில்,  இந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள அமிர்தசரஸ்-பதான்கோட் ரயில் நிலையங்களுக்கிடையிலான தண்டவாளத்தில் 5 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil